அரசு பணிகளில் பெண்களுக்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு... பறிபோகும் ஆண்களின் வாய்ப்பு..!
அரசு பணிகளில் பெண்களுக்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு என்னும் அறிவிப்பால் தங்களின் வேலை வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும் என ஆண் போட்டித்தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதைப் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
தமிழக அரசுத் துறை வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு இப்போதுள்ள 30 விழுக்காடு இட ஒதுக்கீடு இனி 40 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இப்போது அரசுத்துறைப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும்போதே அவர்கள் அதையும் சேர்த்து மொத்த இடங்களில் 60 விழுக்காடு வரை வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இனி 40 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினால் மொத்தத்தில் 70 விழுக்காடு வரையில் பணியிடங்களைப் பெண்கள் பெற வாய்ப்புள்ளது. இதனால் ஆண்களின் வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும் என ஆண் போட்டியாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்...
கடந்த 2 ஆண்டுகளின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, பெரும்பாலும் பெண்கள் அதிக அளவில் அரசு பணியிடங்களைப் பெற்றிருப்பதையும் பார்க்க முடிகிறது.
பெண்களால் இடங்களைப் பிடிக்க முடியாதபோது அவர்களுக்கு ஒதுக்கீடு தேவையானது தான் என்றும், ஆண்களுக்குச் சமமாகப் போட்டியிட்டு இடங்களைக் கைப்பற்றும்போது, ஆண்களின் இடங்களையும் பறித்துப் பெண்களுக்கு ஒதுக்குவது சரியாக இருக்காது என்றும் சில பெண் போட்டித் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...
அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தோடு 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முயன்று வருகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் நடைபெறாததால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், பெண்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்தும் அரசின் இந்த அறிவிப்பு தங்களுக்குப் பேரிடியாக இறங்கியுள்ளதாக ஆண் போட்டித்தேர்வுகள் வேதனை தெரிவித்துள்ளனர்..
பெண்களுக்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்குப் பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிபாதியாக 50 விழுக்காடு கொடுத்து விட்டால் கூடத் தங்களுக்கு அது நீதியாக இருக்கும் எனக் கூறும் ஆண் போட்டித் தேர்வர்கள், அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments