தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்கள்- உயிர் காக்கும் பணியில் மாநகராட்சி!
தமிழ்நாட்டில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதே போன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை வாரா வாரம் நடத்துமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். இதையடுத்து இன்று சென்னையில் 1,600 முகாம்கள் உள்பட தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் தடுப்பூசி மூகாம்கள் மூலம் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெரு கடை வீதியில் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஆய்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உட்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இதன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னையில் இன்றைய தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்
முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
Comments