தவறான மார்கத்தில் சென்ற போலீஸ் வேன், கார் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழப்பு.. 12 பேர் படுகாயம்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, தவறான மார்கத்தில் சென்ற போலீஸ் வேன், கார் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். 12 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊழியர்களை வேலூரிலிருந்து ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனம், ஆரணி அருகே அழகுசேனை பகுதியில் எதிரே வந்த கார் மீது மோதியது.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளில், போலீஸ் வாகனம் சாலையில் வலதுபுறமாக செல்வதும், எதிரே வந்த கார் முறையாக இடதுபுறம் வருவதும் பதிவாகியுள்ளது. இதனால் விபத்தை தவிர்க்க கார் வலதுபுறமாக ஒதுங்கி செல்ல முற்படும்போது, போலீஸ் வாகனமும் வேகமாக திசை திரும்பிச் செல்ல இரு வாகனங்களும் பெரும் சத்தத்துடன் மோதின.
இந்த விபத்தில் காரில் வந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த மேலும் 3 ஆண்கள் படுகாயமடைந்தனர். இதேபோல, போலீஸ் வாகனத்தில் சென்ற சரஸ்வதி என்கின்ற காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி புரியும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்த 12 பேருக்கும் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பி அசோக் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். காரில் வந்தவர்களின் விவரம் வெளியாகவில்லை.
Comments