தூங்கிய முதியவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி சீலிட்ட அதிகாரிகள்..! ஜப்தினாலும் நியாயம் வேணாமா?

0 2879
தூங்கிய முதியவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி சீலிட்ட அதிகாரிகள்..! ஜப்தினாலும் நியாயம் வேணாமா?

மயிலாடுதுறையில் கடன்காரரின் வீட்டை ஜப்தி செய்ய வந்தவர்கள், அந்த வீட்டில் போக்கியத்திற்கு இருந்தவரையும் சேர்த்து வீட்டுக்குள் வைத்து பூட்டி சீல் வைத்துச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மயிலாடுதுறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில், 66 வயதான புருஷோத்தமன் என்பவர் 3 லட்சம் ரூபாய் கொடுத்து போக்கியத்திற்கு கடந்த 7 ஆண்டுகளாக குடியிருந்து இருந்துவந்தார். அந்த வீட்டின் பக்கமே வராத உரிமையாளர், தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை உரிய காலத்தில் கட்டாததால், நிதி நிறுவனத்தினர் நீதிமன்றம் மூலம் அந்த வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளனர். வியாழக்கிழமையுடன் காலஅவகாசம் முடிவடைந்த நிலையில், கடனை திரும்பச் செலுத்த முடியாத வீட்டின் உரிமையாளர், தனது வீட்டை ஜப்தி செய்துகொள்ளுங்கள் என நிதி நிறுவனத்தினரிடம் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இதையடுத்து, புதன்கிழமை சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்ற நிதிநிறுவனத்தினர், முதல்தளத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள புருஷோத்தமன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததை அறியாமல் வீட்டின் முன்பக்க கேட்டை இழுத்து பூட்டி அந்த பூட்டுக்கு சீல் வைத்து சென்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டுக்கு தனது தந்தையைப் பார்க்க வந்த புருஷோத்தமனின் மகன் சதீஷ், தந்தை மாடியில் உள்ள நிலையில் வீட்டை பூட்டி சீல் வைத்துவிட்டனர் என்று கூறி கதறியதோடு, இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மாடியில் புருஷோத்தமன் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு உணவு வழங்கப்பட்டது. நிதி நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு, இது நீதிமன்ற நடவடிக்கை என்றும் வீட்டின் முதல் மாடியில் பெரியவரை போக்கியத்துக்கு வைத்துள்ளதையோ, அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்ற தகவலையோ வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கவில்லை என்றும் மாடியில் ஆள் இருந்தது தங்களுக்கு தெரியாது என்றும் விளக்கம் அளித்தனர்.

உடனடியாக அவரை மீட்கவேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டதால், நாகை நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனத்தினர் மயிலாடுதுறை சென்று மாடி பகுதிக்குச் செல்லும் கேட்டின் சீலை நீக்கி முதியவரை மாடியிலிருந்து மீட்டனர். தனது பணம் 3 லட்சம் ரூபாய் என்னவானது என்று புலம்பியபடியே வெளியே வந்த புருசோத்தமனை, கைத்தாங்கலாக அவரது மகன் அழைத்துக்கொண்டு சென்றார்.

தொடர்ந்து அனைவரையும் மயிலாடுதுறை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். ஜப்தி செய்யப்பட்ட வீடு ஏலம் விடப்பட்டதும் புருஷோத்தமன் தொகை குறித்து வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் நிதி நிறுவனத்தினர் உறுதி அளித்துச்சென்றனர்.

முதியவரின் மகன் மட்டும் அங்கு வந்து உரிய நேரத்தில் பார்த்திருக்காவிட்டால் வீட்டுக்குள்ளேயே முதியவர் அடைப்பட்டு ஏதாவது விபரீதம் அரங்கேறி இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அதே நேரத்தில் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ? என்பது போல உள்ளே யாராவது இருக்கிறார்களா என்பதை கூட அறியாமல் வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றுள்ளனர் ஜப்தி குழுவினர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments