சென்ட்ரல் விஸ்டா திட்டம்...எதிர்க்கட்சிகளுக்கு மோடி கண்டனம்
டெல்லியில் பாதுகாப்பு அமைச்சத்திற்கான இரண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்த பிரதமர் மோடி, விஜய் சதுக்கத்தில் நடக்கும் சென்ட்ரல் விஸ்டா கட்டிடப் பணிகளை குறை கூறுவோருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி கஸ்தூரிபாய் சாலை மற்றும் ஆப்பிரிக்கா அவென்யூவில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 7 ஆயிரம் பேர் பணியாற்றும் அளவுக்கான இந்த கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
டெல்லி சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம், புதிய அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பிரதமர் இல்ல திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கட்டிட திறப்பு விழாவில் பேசிய மோடி, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை , முக்கிய அரசு அலுவலகங்கள் இருக்கும் நிலைமை தெரியாமல், சில தலைவர்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக குறை கூறுவதாக கண்டனம் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் குதிரை லாயங்களாக பயன்படுத்தப்பட்ட பழைய கட்டிடங்களில் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் பணிபுரிந்து வந்ததை சுட்டிக்காட்டிய அவர், அது குறித்தும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு புதிய கட்டிடங்கள் ஏன் அத்தியாவசியம் என்பது குறித்தும் அந்த தலைவர்கள் ஒரு முறையாவது பேசியுள்ளார்களா? என வினவினார்.
நாட்டின் ராணுவத்திற்கு தமது அரசு உச்சபட்ச முன்னுரிமையும் கவுரமும் அளிப்பதாக பிரதமர் கூறினார். ராகுல் காந்தியின் விமர்சனத்தை குறிப்பிடாமல் பேசிய மோடி, அப்படி பேசினால் அந்த தலைவர்களின் பொய்யும் புரட்டும் அம்பலமாகிவிடும் என்றும் தெரிவித்தார்.
50 ஏக்கரில் பாதுகாப்பு அமைச்சக அலுவலகங்கள் செயல்பட்ட சுமார் 700 பழமையான கட்டிடங்கள் புதிய எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ் ஆக மாற்றப்பட்டு அங்கு பிரதமரின் இல்லம் அமைக்கப்படும் என மோடி தெரிவித்தார்.
Comments