முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு.... மொத்தம் 28 இடங்களில் சோதனை

0 4831

5 வருடங்களில் வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர் தொடர்புடைய 28 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகவும், குடும்பத்தினர் பெயரிலும் அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை, அவரது வீடு, நண்பர்கள், உறவினர்கள், நெருங்கிய அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சாந்தோமில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கே.சி.வீரமணி பயன்படுத்திய காரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, சூளைமேடு, கொளத்தூர், அண்ணாநகர் ஆகிய இடங்களிலும் கே.சி.வீரமணிக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுபவர்களின் வீடுகளில் ரெய்டு நடைபெற்று வருகிறது.

கே.சி.வீரமணியின் சொந்த ஊரான ஜோலார்பேட்டையிலுள்ள இரண்டு வீடுகள், அவரது தாய் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ரெய்டு நடப்பதை அறிந்து, கே.சி.வீரமணி வீட்டுக்கு முன் கூடிய அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கே.சி. வீரமணிக்கு சொந்தமான குடியாத்தம் வேளாண்மை கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அத்தோடு, கே.சி.வீரமணியின் தந்தை நடத்தி வந்த பீடி தொழிற்சாலை, திருமண மண்டபம், கே.சி.வீரமணியின் உதவியாளர் ஆர்.ரமேஷ், சீனிவாசன் ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது. கே.சி.வீரமணிக்கு நெருக்கமானவர்களும், அதிமுக நிர்வாகிகளுமான ரமேஷ், காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கே.சி.வீரமணியின் மற்றொரு உதவியாளரும் அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான சியாம்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது. திருப்பத்தூரில் கே.சி.வீரமணிக்கு நெருக்கமான நண்பரும், அதிமுக பிரமுகர்களான கர்ணல் என்பவரது வீடு மற்றும் குடிநீர் ஆலை நிறுவனத்தில் சோதனை நடத்தப்படுகிறது. இதேபோன்று, சேண்பாக்கத்தில் ஜெயபிரகாஷ் என்பவரின் வீடு, வெட்டுவானத்தில் புகழேந்தி என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலை கிராமத்தில் கே.சி.வீரமணியின் மாமனார் பழனி என்பவரது பண்ணை வீடு, ஓசூரில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூருவிலும் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது.

இதனிடையே கே.சி.வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், கே.சி.வீரமணி வணிகவரித்துறை அமைச்சராக இருந்த 2016-2021 கால கட்டத்தில் 654 சதவீதம் அளவுக்கு சொத்து குவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர், சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய இடங்களில் தன் பெயரிலும், தன்னுடைய குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2016 சட்டமன்ற தேர்தலின் போது, கே.சி.வீரமணி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது சொத்து மதிப்பு 25 கோடியே 99லட்சம் ரூபாய் எனக் கணக்கு காட்டப்பட்டிருந்தது. கே.சி.வீரமணி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த 5 வருடத்தில் 4 கோடியே 39 லட்சம் ரூபாய் அளவில் வருமானம் கிடைத்திருந்ததாககவும், கொடுக்க வேண்டிய கடன், செலவீனங்கள் 2 கோடியே 56லட்சமாக கணக்கு காட்டப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த 25கோடியை தவிர, கூடுதலாக 28கோடியே 78லட்சம் ரூபாய் அளவுக்கு வீரமணி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கே.சி.வீரமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வரும் நிலையில், இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் ரெய்டு நடத்தப்படுவதாகவும், அது ஒருபோதும் நிறைவேறாது எனவும் கூறினார்.  

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வழக்கறிஞர், வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ளதாக கூறப்படும் 28 கோடி ரூபாய் சொத்துகளுக்கு முறையான கணக்கு உள்ளதாகவும், அதனை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். 

இந்த நிலையில், ஜோலார்பேட்டையிலுள்ள கே.சி.வீரமணி வீட்டுக்கு முன் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கே.சி.வீரமணி வீட்டுக்கு முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பி, தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், அங்கிருந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தவறான தகவலை பரப்பியதாக கூறி செய்தியாளர்களை அவர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் பங்குதாரர் எனக் கூறப்படும் ராம ஆஞ்சநேயலு என்பவரது சூளைமேடு வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், அங்கு யாரும் இல்லாததால், வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதேபோன்று, அண்ணாநகர் சாந்திகாலணியிலுள்ள ராம ஆஞ்சநேயலு வீட்டையும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சீல் வைத்தனர். முன்னதாக, ராம ஆஞ்சநேயலு நடத்தி வரும் பாவியா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்திலும் அண்ணா நகரில் சோதனை நடத்தப்பட்டது. 

இந்த சோதனையில் 34 லட்சம் ரொக்கம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்  மதிப்பிலான அன்னிய செலாவணி டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், சுமார் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

5 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணலும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments