கார் திருடனை விரட்டிப் பிடித்த காவல் சிங்கம்..!
பட்டுக்கோட்டையில் திருட்டுக்காருடன் தப்பிய கொள்ளையர்களை விரட்டிச்சென்று பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. பட்டப்பகலில் திருடனை பரபரப்பாக விரட்டிப்பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த இருவர் அந்த கார் ஓட்டுனரை தாக்கி காரில் இருந்து தள்ளி விட்டு, காரை பறித்துக்கொண்டு, மதுரை நோக்கி தப்பிச்செல்வதாக காவல்துறையினரின் வயர்லெஸில் அவசர தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் வர்ணம், நம்பர் போன்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளது.
இதனை கவனித்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., செங்கமலக் கண்ணனின் டிரைவராக பணியாற்றும் முதல்நிலை காவலரான பிரதீப் என்பவர், மைக்கில் கூறப்பட்ட கார் நம்பர் உள்ளிட்ட விவரங்களை குறித்து வைத்து இருந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை மதியம் 12:45 மணிக்கு, பட்டுக்கோட்டையில் நெரிசல் மிகுந்த மணிக்கூண்டு பகுதியில், பிரதீப் , மெடிக்கலில் மாத்திரை வாங்குவதற்கு சென்றபோது, மைக்கில் கூறிய பதிவெண் கொண்ட கார் சென்றதைப் பார்த்துள்ளார். பின்னர் டூ விலரில் காரை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளார்.
போலீசைக் கண்ட வேலுப்பாண்டி, வெங்கடேஷ் இருவரும், காரை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓட முயன்றனர். அப்போது, அவர்களை விரட்டிச்சென்றார் பிரதீப். ஒரு இடத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் ஓடிய ஒருவனை எட்டிப்பிடிக்க முயன்றபோது பிரதீப் கீழே விழுந்து காயமடைந்தார்.
ரத்தம் வடிந்த நிலையிலும், கார்திருடனை விடாமல் விரட்டி பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தார் பிரதீப். மற்றொரு கொள்ளையன் தப்பியோடி விட்டான்.
இந்த பரபரப்பான சேசிங் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்தன. விசாரணையில், பிடிபட்ட கொள்ளையன் மதுரையைச் சேர்ந்த வேலுப்பாண்டி என்பதும் தப்பி ஓடியவன் வெங்கடேஷ் என்பதும் தெரியவந்தது. வேலுப்பாண்டியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கார், இரண்டு செல்போன்கள், 8 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு வெள்ளி கைச்சங்கிலி ஆகியவற்றை மீட்ட காவல்துறையினர், காரில் இருந்த கத்தியை பறிமுதல் செய்து, தப்பியோடிய திருடன் வெங்கடேஷைத் தேடி வருகின்றனர்.
கொள்ளையர்களை விரட்டிப் பிடித்ததில் காயமடைந்த காவலர் பிரதீப்பிற்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் வீரதீரச் செயலை எஸ்.பி. ரவ்ளிப்ரியா, டி.எஸ்.பி.,செங்கமலக் கண்ணன் உள்ளிட்ட சக போலீசார் பாராட்டினர்.
Comments