பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்ததினம் இன்று
தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணாவிற்கு இன்று 113ஆவது பிறந்தநாள்.. எளிய குடும்பத்தில் பிறந்து லட்சக்கணக்கான இளைஞர்களை தம்வசம் கவர்ந்திழுந்த பெருந்தகை குறித்த ஒரு செய்தித் தொகுப்பு
அண்ணா... தமிழகமெங்கும், அன்றாடம் மக்களால் உச்சரிக்கப்படும் சொல் இது.....
குட்டையான உருவம், கலைந்த தலைமுடி, கசங்கிய வேட்டி- சட்டை, கரகரத்த குரல்.. இவைகள் தான் அண்ணாவின் அடையாளங்கள். அவரது எளிய தோற்றமும்,பேச்சும், பண்பும் மக்களின் மனங்களை கவர்ந்தது...
காஞ்சிபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா, ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பை முடித்தபின் நகராட்சி எழுத்தராகப் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டம் படித்தபோது பேச்சாற்றல் எழுத்தாற்றலில் சிறந்து விளங்கினார். தமிழ்- ஆங்கிலம் இருமொழிகளையும் அவர் சரளமாக கையாண்டதை நேரில் கண்டவர்கள் வியந்தனர்...
பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். 1949ல் தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணாவின் பின்னால் லட்சக்கணக்கில் இளைஞர்கள் அணிவகுத்து வந்தனர்...
1957ல் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில், தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. 1962-ம் ஆண்ட மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, நாடாளுமன்றத்தில் தனது கனல் தெறித்த பேச்சின் மூலம் அகில இந்திய தலைவர்களின் கவனத்தை பெற்றார்...
1967ல் தி.மு.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தபோது அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்றார். சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார், பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார், சுயமரியாதை திருமணச் சட்டத்தை கொண்டு வந்தார், தமிழறிஞர்களை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு சிலைகளை நிறுவினார். எங்கும் எதிலும் தமிழுக்கு முதலிடம் தந்தார்...
இறுதிக்காலத்தை புற்றுநோயுடன் போரிட்டு அதில் வெல்ல முடியாமல் தோற்றுப்போனார் அண்ணா. 1969 ல் அண்ணா மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது...
ஜனநாயக நாட்டில் அதிகாரத்தை எளியவர்களும் அடைவதற்கான நவீன அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா. லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தவர் அவர். சாதி மத பேதங்களை கடந்து அவர்களை ஒரு தத்துவத்தின் குடையின் கீழ் ஒருங்கிணைத்து, அரசியல் களத்தில் வெற்றி பெறச் செய்து அதிகார நிழலில் அமரவைத்து ஒரு தலைமுறையையே செழுமைப் படுத்திய பெருமை அண்ணாவைச் சாரும். அவர் நிறுவிய இயக்கமும், அவரது பெயரால் இயங்கும் இயக்கமும் இன்று முன்னணிக் கட்சிகளாக விளங்கி வருகின்றன.
சென்னையில் அண்ணா நினைவிடத்தில் இருந்து புறப்படும் ஒருவர் அண்ணாசாலை, அண்ணா சிலை, அண்ணா மேம்பாலம், அண்ணா அறிவாலயம், அண்ணா மருத்துவமனையைக் கடந்து அண்ணா நகருக்கு செல்ல முடியும். அண்ணா பெயரில் பல்கலைக்கழகம், நூற்றாண்டு நூலகம், மேலாண்மை நிலையம், விமான முனையம், உயிரியல் பூங்கா... இப்படி தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் அண்ணாவின் பெயரைத் தாங்கி நிற்பது அவர்மீது மக்கள் வைத்துள்ள அபிமானத்தை பறைசாற்றும்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பேரறிஞர் அண்ணாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பெரியகுளம் காவல்நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கும் ஓ.பி.எஸ். மாலை அணிவித்தார்.
Comments