மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணி, சென்னையில் அமலுக்கு வந்தது போக்குவரத்து மாற்றம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், சென்னை ஆற்காடு சாலையில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வந்தன. இந்த மாற்றம் இன்று முதல் ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியாக கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் 80 அடி சாலை வரை பணிகள் நடைபெறுவதால் கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை. கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர், சாலிகிராமம், வடபழனி நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்புவரை சென்று அம்பேத்கர் சாலை வழியாக 100 அடிசாலை வழியாக சென்று கொண்டிருக்கின்றன.
வடபழனி சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. மாறாக பவர் ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அசோக் பில்லரிலிருந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி துரைசாமி சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால், பவர் ஹவுஸ் சிக்னலில் இருந்து, ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பு வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இது ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.
100 அடி சாலை சந்திப்பில் இருந்து, 2வது அவென்யூ செல்லவும் அனுமதி இல்லை. அதேபோன்று, அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பிலிருந்து, ஒரு வழிப்பாதை என்பதால் பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை.
இதனிடையே, பவர்ஹவுஸ் சந்திப்பில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது இரும்பு தடுப்பு விழுந்து ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த மார்கத்தில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை எல்&டி நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments