தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

0 5006
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த  மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு ஜூலை 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி நிறைவு பெற்றது. ஒரு லட்சத்துக்கு 74 ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். அதில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேர் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். இந்நிலையில் www.tneaonline.org இணைய தளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

200க்கு200 கட்-ஆஃப் மதிப்பெண்ணை 13 பேர் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாளை முதல் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இந்த ஆண்டு 5 கட்டமாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

முதல் கட்டமாக அரசுப் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்கி, வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த, 529 பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் விண்ணப்பித்திருந்தன.

இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உரிய சான்றிதழை சமர்ப்பிக்காததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அங்கீகார விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றன. போதிய உள்கட்டமைப்பு, தகுதியான ஆசிரியர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏஐசிடிஇ மறுத்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதால், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளது.கடந்த ஆண்டை விட தற்போது 11 ஆயிரத்து 284 பொறியியல் இடங்கள் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments