அமிலம் தெறித்து மாணவிகள் காயம்... தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

0 11996

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகத்திலுள்ள பொருட்களை அப்புறப்படுத்த முயன்றபோது, அங்கிருந்த கந்தக அமிலம் கொட்டியதில் 4 மாணவிகள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகம் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக இடிக்கப்படுகிறது. 

ஆய்வகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், மற்றொரு பகுதியிலிருந்த கண்ணாடி குடுவைகள் உள்ளிட்ட பொருட்களை சனிக்கிழமைக்குள் அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை ஒரு வாரத்துக்கு முன்பே பள்ளித் தரப்பிடம் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் பொருட்களை எடுக்காமல் பள்ளித் தரப்பு தாமதப்படுத்திய நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வகத்தை இடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் இராஜாராம் அவசர அவசரமாக வணிகவியல் படிக்கும் மாணவிகள் 4 பேரை அழைத்து, ஆய்வகத்திலுள்ள பொருட்களை அகற்றச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அப்போது கந்தக அமிலம் வைக்கப்பட்டிருந்த பாட்டில் மீது காங்கிரீட் துண்டு ஒன்று விழுந்து உடைந்து மாணவிகள் மீது அமிலம் தெறித்ததில், நான்கு பேருக்குமே முகம், கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக மாணவிகள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தலைமை ஆசிரியர் இராஜாராமை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வேதியியல் ஆய்வகத்தில் உள்ள அமிலங்கள், இரசாயனங்கள் குறித்தும் அவற்றின் விளைவுகள் குறித்தும் அறியாத வணிகவியல் மாணவிகளிடம் ஆய்வகப் பொருட்களை அகற்றுமாறு கூறியது பெரும் தவறு என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments