முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி ரிசப்சனுக்கு வந்த சிலரால் மோதல்?... சாலையில் மது அருந்துவதை தட்டிக்கேட்கச் சென்றவர்களை 50 பேர் சேர்ந்து தாக்கியதாக புகார்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி திருமண வரவேற்பு நிகழ்வுக்கு வந்த சிலர், சாலையில் மது அருந்துவதற்கு இடையூறு செய்த நபரை அடித்து உதைத்ததால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
பனையூரில், முக்குலத்தோர் புலிப்படையின் மாநில இளைஞர் அணி செயலாளர் திருமண வரவேற்பு நடைபெற்றது. நிகழ்விற்கு வந்த சிலர் சாலையில் காரை நிறுத்திவிட்டு மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், இருசக்கர வாகனத்தில் வந்த கவின் என்ற இளைஞர் ஹாரன் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கவினை சரமாரியாக தாக்கியதாகவும், நியாயம் கேட்கச் சென்ற பனையூர் குப்பத்து மக்களை, 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி, நாற்காலி, பீர் பாட்டில், வாளிகள், உருட்டுக் கட்டை, கற்களை எடுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் பனையூர் குப்பத்தை சேர்ந்த சுரேந்தர் என்ற நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பைக் எரிக்கப்பட்டதோடு, 2 கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பதற்றமான சூழலால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
Comments