சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. நாளை முதல் ஓராண்டிற்கு இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியாக கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் 80 அடி சாலை வரை பணிகள் நடைபெறுவதால் கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றம் நாளை முதல் ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை
கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம், வடபழனி நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்புவரை சென்று அம்பேத்கர் சாலை வழியாக 100 அடிசாலை வழியாக செல்லலாம்
வடபழனி சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது
அசோக் பில்லரிலிருந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி துரைசாமி சாலை, வழியாக செல்லலாம்
ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்
ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிற்கு ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுவதால் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை
அம்பேத்கர் சாலையில், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படும். ஆனால், அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பிலிருந்து, ஒரு வழிப்பாதை என்பதால் பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments