நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப் பெற சட்டப்பேரவையில் இன்று மசோதா நிறைவேற்றப்படும் - முதலமைச்சர்
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப் பெற சட்டப்பேரவையில் இன்று மசோதா நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அண்மையில் சமர்ப்பித்த அறிக்கையில், நீட் தேர்வு பாதிப்புகளைக் குறிப்பிட்டு, தேர்வை ரத்து செய்ய 3 விதமான பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவ-மாணவிகளின் தற்கொலைகள், கல்வி, மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை வலுவடைய வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்குவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா இன்று நிறைவேற இருப்பதாகத் தெரிவித்தார்.
அனைத்து மாநில முதலமைச்சர்களின் ஆதரவைத் திரட்டி இதில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும்வரை சட்டரீதியான போராட்டம் தொடரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments