கடனாக மது கேட்டு டாஸ்மாக்கில் தகராறு செய்த இளநீர் வியாபாரி ; விசாரணைக்குச் சென்ற தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு
ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் மதுவை கடனாகக் கேட்டு தகராறு செய்த இளநீர் வியாபாரி ஒருவர், அங்கு விசாரணைக்கு வந்த தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சுண்ணாம்பு ஓடை பகுதியிலுள்ள அந்த டாஸ்மாக் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி முருகன் என்பவர் மது வாங்கி அருந்தியுள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில், கையில் பணம் இல்லாமல் கடனாக மது வேண்டும் எனக் கேட்டு ஊழியரிடம் தகராறு செய்தார் என்று கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு வந்த தலைமை காவலர் ராஜு என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முருகன், யாரும் எதிர்பாராத விதமாக இளநீர் வெட்டும் அரிவாளால் அவரது கை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியுள்ளார். காயமடைந்த காவலர் ராஜுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள், முருகனை மடக்கிப் பிடித்து கயிற்றால் கட்டிப்போட்டனர்.
விரைந்து வந்த கருங்கல்பாளையம் போலீசார் முருகனை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது அவர் செய்த அலப்பறையில் மற்றொரு காவலருக்கும் கையில் காயம் ஏற்பட்டது.
Comments