நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவு

0 3271
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவு

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தாண்டு நீட் தேர்வு எளிதாக இருந்ததாகவே மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் திட்டமிட்டப்படி சரியாக பிற்பகல் 2 மணிக்கு நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. நீட் தேர்வுக்காக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 224 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 8,727 பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 10ஆயிரம் பேர் நீட் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.

மாணவர்கள் ஹால்டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் தவிர வேறு எதையும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று, 11.30 மணியில் இருந்து 1.30 மணிவரை மட்டுமே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

மயிலாப்பூரில் அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்து 4 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்த மாணவரை அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பினர். மாணவரின் பெற்றோரும், சக பெற்றோர்களும் தேர்வு மையத்தை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும், அதிகாரிகள் மறுத்துவிட்டதால் மாணவர் சோகத்துடன் வீடு திரும்பினார்.

தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு எளிதாக இருந்ததாகவே கூறினர். கீழ்ப்பாக்கத்திலுள்ள மையத்தில் தேர்வு எழுத சரியான நேரத்துக்கு வந்துவிட்ட மாணவி, ஆதார் அட்டையை எடுத்து வர மறந்து, மீண்டும் வீட்டுக்குச் சென்று ஆதார் அட்டையை எடுத்து வந்ததால் 15 நிமிடம் தாமதமானது. இதனையடுத்து மாணவியை உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். கண்ணீருடன் அந்த மாணவி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

நகைகள், கைக்கடிகாரம், வளையல், கம்மல், கொலுசு, துப்பட்டா அணிந்து வந்த தேர்வர்கள் அவற்றை அகற்றிய பிறகே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஷூ, சாக்ஸ் உள்ளிட்டவையும் அனுமதிக்கப்படவில்லை.

காஞ்சிபுரம் அடுத்த படப்பை தேர்வு மையத்தில் நுழைவு சீட்டின் இரண்டாவது பக்கம் வேண்டாமென முதலில் கூறிய அதிகாரிகள் தேர்வு தொடங்கவுள்ள நேரத்தில் இரண்டாம் பக்கம் அவசியம் தேவையெனக் கூறி அலைக்கழித்தனர் என்று கூறப்படுகிறது. இதனால் தேர்வு 30 நிமிடங்கள் காலதாமதமாக தொடங்கி, கூடுதலாக அரை மணி நேரம் நடைபெற்றுள்ளது. அதிகாரிகளின் மெத்தனமே இதற்குக் காரணம் எனக் கூறி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கோவையில் நீட் தேர்வை எழுதிவிட்டு தேர்வு மையத்திலிருந்து வெளியே வந்த தங்கள் பிள்ளைகளை கைதட்டி ஆராவாரத்துடன் பெற்றோர் வரவேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நீட் தேர்வு மையத்துக்குச் செல்வதற்கு வழி தெரியாமலும் போக்குவரத்து வசதி இல்லாமலும் பொன்னேரி அருகே வேடியப்பன் என்ற மாணவர் தவித்துக் கொண்டிருந்தார். அவ்வழியாக ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மாணவர் கையிலிருந்த அட்டை, பேப்பர்கள் உள்ளிட்டவற்றைப் பார்த்து காரை நிறுத்தி விசாரித்திருக்கிறார். மாணவர் தனது நிலையைக் கூறவும், உடனடியாக அவரை தனது காரில் ஏற்றிச் சென்று தேர்வு மையத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments