ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் பெண் ஏஜென்டிடம் மயங்கிய தபால் அதிகாரி; ராணுவ ரகசிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதால் கைது..!
ஃபேஸ்புக்கில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஏஜென்டிடம் மயங்கி, இந்திய ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் பரிமாறியதாக, ராஜஸ்தானில் ரயில்வே தபால்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூரில் தபால்களை பிரித்து அனுப்பும் பொறுப்பில் இருந்த பாரத் பவாரி என்ற அந்த நபருக்கு, ஃபேஸ்புக்கில் அறிமுகமான அழகி, போர்ட் பிளேரில் எம்.பி.பி.எஸ் படிப்பதாக கூறியுள்ளார். நேரில் சந்தித்து பழகலாம் என வாட்ஸ்அப் வீடியோகாலில் அந்த பெண் பேசிய பேச்சால், தேனில் விழுந்த எறும்பு போல ஆன அந்த அதிகாரி, தபாலில் வந்த ராணுவ தகவல் தொடர்பு ஆவணங்களை படமெடுத்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றும் உறவினருக்கு இடமாறுதல் தேவைப்படுவதாகக் கூறி ஆவணங்களை அந்த பெண் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராணுவ புலனாய்வுப் பிரிவினரும், ராஜஸ்தான் மாநில உளவுப் பிரிவினரும் இணைந்து பாரத் பவாரியை கைது செய்துள்ளனர்.
விசாரணை, கைதுக்குப் பிறகே, பாகிஸ்தான் உளவு ஏஜென்டிடம் ஏமாந்தது அந்த நபருக்கு தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாரத் பவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments