"வீழ்வேன் என நினைத்தாயோ" மரணத்திற்கே சவால் விடுத்த பாரதிக்கு இன்று நூற்றாண்டு நினைவுநாள்
"வீழ்வேன் என நினைத்தாயோ" என மரணத்திற்கே சவால் விடுத்த பாரதிக்கு இன்று நூற்றாண்டு நினைவுநாள். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மகாகவியின் சாதனைகளையும், தீர்க்கதரிசனத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு
கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி என்றார் பாரதி... சுதந்திர தாகம், மானுட உயர்வு, கண்ணம்மாவிடம் காதல்... என உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை அள்ளித் தெளித்தவர் முண்டாசுக்கவி.
விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக விஸ்வரூபமெடுத்த பாரதி, வெள்ளையர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து கவிதைகள் படைத்தார்.பாஞ்சாலி சபதத்தையும் விடுதலை கீதமாக பாடியது பாரதியின் தனிச்சிறப்பு.
பாரதி ஒரு தீர்க்கதரிசி... அதனால்தான் சுதந்திரத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்தி முழங்கினார்..தமிழ்க் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்து, எளிமையாக உருவாக்கி புதிய பாதையை அமைத்தவர் பாரதி. எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று அறைகூவல் விடுத்தவர் அவர்.
தமிழ் இலக்கியத்திற்கு புதுக்கவிதை, ஹைகூ, சிறுகதை என நவீன வடிவம் கொடுத்தவரும் பாரதிதான்....பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பகவத் கீதை உரை போன்றவை அவரது அழியாப் புகழுக்குக் கட்டியம் கூறுகின்றன. கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்தவர் பாரதி
பாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை அவ்வப்போது செவிக்கு இன்பம் தந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பிறமொழி இலக்கியம், உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பாரதி பெற்றிருந்தார்.
பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மீனவர் பிரச்சினை, இலங்கை மலையகத் தமிழர் துன்பங்கள், இதழியல், கேலிச்சித்திரம் என தமது காலத்திற்கு முன்னே சென்று சிந்தித்த பாரதி இன்றும் தமிழக மக்களுக்கு ஒரு அழியா சொத்துதான்.
Comments