தண்ணீருக்குள் விநாயகரான ஆழ்கடல் வீரர்கள்..! பொழுது போக்கு பூங்காவில் உற்சாகம்
விநாயகர் சதூர்த்தி விடுமுறையை கொண்டாட வரும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுது போக்கு பூங்கா ஒன்றில் நீருக்குள் விநாயகர் போல வேடம் அணிந்த ஆழ்கடல் வீரர் தோன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வி,ஜி,பி மரைன் கிங்டம் என்ற ஆழ்கடல் கண்காட்சி பொழுது போக்கு பூங்காவில் விநாயகர் சதூர்த்தி விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட வரும் பார்வையாளர்களை கவர புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
இங்குள்ள ஆழ்கடல் மீன்களை காணவரும் சிறுவர்களையும் பெண்களையும் கவரும் வகையில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் விநாயகர் போன்று வேடமிட்டு நீருக்குள் வலம் வருகின்றனர்.
பார்வையாளர்களை கவரும் வகையில் ஆசிர்வாதம் வழங்கியும், கிட்டார் வாசித்தபடியும் ஹைஃபை போட்ட படி சிறுவர்களோடு விளையாடிய ஆழ்கடல் விநாயகரின் நடவடிக்கைகள் வெகுவாக கவர்ந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
அங்கு வந்த பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் என அனைவரும் ஆர்வத்தோடு ஆழ்கடலில் காட்சியளித்த விநாயகரோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் கடந்த ஒன்றரை ஆண்டு கால கொரோனா கால கட்டுப்பாடுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த பொழுது போக்கு பூங்கா திறக்கப்பட்டுள்ளதால், விடுமுறை நாளை கழிக்க குடும்பத்தோடு வந்த பார்வையாளர்கள் தங்களுக்கு வித்தியாசமான விநாயகர் தரிசனம் கிடைத்ததாக பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு விநாயகரை போற்றும் வகையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சியானது வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என ஆழ்கடல் கண்காட்சி மேலாளர் தெரிவித்தார். போட்டி நிறைந்த வணிக உலகில் மக்களை கவர, புதிய புதிய யுக்திகளை பொழுது போக்கு நிறுவனங்கள் கையாண்டு வரும் நிலையில், இந்த ஆழ்கடல் வினாயகரின் தரிசனம் பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களின் வருகையால் மரைன் கிங்டம்முக்கும் அருள் புரியட்டும்..!
Comments