விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் குளத்தில் சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.
இதேபோல், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு தலா 30 கிலோ எடை கொண்ட 2 ராட்சத கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் அங்குச தேவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் குளத்தில் நீராடாடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு தலா 30 கிலோ எடை கொண்ட 2 ராட்சத கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டன. தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த ராட்சத கொழுக்கட்டைகள் தயாரிக்கபட்டன. பின்னர் மேளதாளத்துடன் ராட்சத கொழுக்கட்டைகள் எடுத்துவரப்பட்டு உச்சி பிள்ளையாருக்கு படைக்கப்பட்டு, பின்னர் பிரசாதமாக வழங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சேலம் டவுனில் உள்ள ராஜகணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக விநாயகருக்கு பால் , தயிர்,மற்றும் மஞ்சள் , சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோவில் வாசலில் நின்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் சின்னாண்டான் கோவில் ரோடு பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணிமுதல் விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம், மஹா அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதி பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டடு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 500 கிலோ எடையிலான லட்டுகளை கொண்டு லட்டு விநாயகர் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள வலம்புரி சக்திகணபதி கோயிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. மேலும், 500 கிலோ எடை கொண்ட லட்டுகளால் சிலை செய்யப்பட்டு, முந்திரி, பாதாம், பிஸ்தா, செரி (Cherry) போன்ற உலர்பழவகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
சென்னை விநாயகர் சதுர்த்தியையொட்டி மயிலாப்பூரில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கோயிலின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் வீட்டில் வைத்து வழிபடுவதற்காக பொதுமக்கள் விநாயகர் சிலைகள், பூ, பழங்கள்,கரும்பு, தோரணங்கள் அகிவற்றை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். சிறிய அளவிலான சிலைகள் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் எழுந்தருளியுள்ள 11 அடி உயரம் கொண்ட பஞ்சமுக விநாயகருக்கு வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடுகளால் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், கோயிலுக்கு வெளியே இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூவர் மாவட்டம் திருவொற்றியூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 1008 தேங்காய் கொண்டு உருவாக்கப்பட்ட 7 அடி உயர விநாயகர் சிலைக்கு, 108 வலம்புரி சங்கு வைத்து, சங்கநாதம் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
வரும் ஞாயிற்று கிழமை வரை தேங்காய் விநாயகருக்கு, தமிழ் முறைப்படி சிறப்பு வழிபாடு நடைபெறும் என்றும், அதன் பின்னர் பக்தர்களுக்கு தேங்காய் பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments