ஐஎன்எஸ் துருவ் கப்பல் கடற்படையில் இணைகிறது... இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பு மேம்படும்
இந்தியாவின் முதலாவது சேட்டிலைட் மற்றும் பாலிஸ்டிக் மிசைல் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான ஐஎன்எஸ் துருவ் இன்று கடற்படையில் இணைகிறது.
பத்தாயிரம் டன் எடையுள்ள ஐஎன்எஸ் துருவ், விசாகப்பட்டினத்தில் வைத்து கடற்படை, DRDO,NTRO மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் நாட்டின் சேவையில் அர்ப்பணிக்கப்படுகிறது, இந்திய நகரங்கள் மற்றும் ராணுவ நிலைகளை நோக்கி வரும் எதிரிகளின் ஏவுகணைகளை முன்னதாகவே கண்காணித்து எச்சரிக்கும் திறனுள்ள இந்த கப்பலில் DRDO உருவாக்கிய நவீன active scanned array radar பொருத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் இந்தியாவை உளவு பார்க்கும் சேட்டிலைட்டுகளையும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நடக்கும் அனைத்து ஏவுகணை பரிசோதனைகளையும் கண்காணிக்க முடியும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அணுஆயுத பாலிஸ்டிக் மிசைல் ஆபத்து அதிகரித்து வரும் நிலையில், எதிரிகளின் நீண்ட தூர அணுஆயுத ஏவுகணைகளை கண்டுபிடிக்கும் திறன் இந்த கப்பலுக்கு உண்டு.
எதிரிகளின் நீர்மூழ்கிகளை கண்டுடிப்பதற்கான கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. நவீன நீர்மூழ்கிகள் வாயிலாக கடலடி போர் ஆயுதங்களும், கண்காணிப்பு டிரோன்களும் அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த காலகட்டத்தில், ஐஎன்எஸ் துருவ் கடற்படையில் இணைவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா கடற்வழி பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க உதவும் .
சீனாவும், பாகிஸ்தானும் அணுஆயுத பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்துள்ளன. எனவே ஐஎன்எஸ் துருவ் இந்தியாவின் கடற்வழி பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும். பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இது போன்ற கப்பல் உள்ள நிலையில் இந்தியாவும் இப்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
Comments