பயங்கரவாத எதிர்ப்புச் செயல் திட்டம்.! பிரிக்ஸ் நாடுகள் ஏற்பு.!
பிரிக்ஸ் மாநாட்டுக்குத் தலைமையேற்ற பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்புச் செயல்திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் விளைநிலமாகிவிடக் கூடாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த அமைப்பு பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் 13ஆவது கூட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலியில் நடைபெற்றது. இதில் மற்ற நான்கு நாடுகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மோடி, கொரோனா சூழலிலும் இந்த ஆண்டில் பிரிக்ஸ் தொடர்பான 150 சந்திப்புகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 அமைச்சர்கள் நிலையிலானவை என்றும் தெரிவித்தார். பிரிக்ஸ் நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்கள் நவம்பரில் முதன்முறையாகச் சந்தித்துப் பேச உள்ளதாகக் குறிப்பிட்டார். பயங்கரவாத எதிர்ப்புச் செயல் திட்டம் ஒன்றையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஒன்றாக இணைந்து செயல்பட்டால் இலக்கை அடைய முடியும் என்பதைக் கொரோனாவுக்கு எதிரான கூட்டுமுயற்சியில் கண்டுணர்ந்ததாகத் தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்துகள், நோய்காண் முறைகள், சிகிச்சை முறைகள் ஆகியன அனைவருக்கும் சம அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கொரோனாவை முறியடிக்க ஒரே வழி அதுதான் என்றும் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் எழும் புதிய சிக்கல் உலகளாவிய மற்றும் மண்டலப் பாதுகாப்பைப் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றால் ஆப்கானிஸ்தான் அண்டைநாடுகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக ஆகிவிடக் கூடாது என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின் அனைவரும் குழுவாகப் படம்பிடித்துக் கொண்டனர்.
Comments