போர்டு இந்தியா நிறுவனம்..! இந்தியாவிலிருந்து விடைபெறுகிறது.!

0 5924
போர்டு இந்தியா நிறுவனம்..! இந்தியாவிலிருந்து விடைபெறுகிறது.!

சென்னை மறைமலைநகர் மற்றும் குஜராத் மாநிலம் சனாந்தில் உள்ள தனது 2 தொழிற்சாலைகளையும் மூடி, இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக போர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிகவும் பழமையும் பாரம்பரியமும் நிறைந்த போர்டு கார் நிறுவனம் முதன்முதலாக 1928 ல் இந்தியாவில் உற்பத்தியை துவக்கினாலும், பல்வேறு கடுமையான இறக்குமதி கட்டுபாடுகள் காரணமாக 1953 ல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியது.

அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கை வந்தபின் 1995 ல் சென்னையில் உற்பத்தி ஆலையை நிறுவி இந்திய கார் சந்தையில் நுழைந்தது.அப்போது மஹிந்திரா&மஹிந்திராவுடன் சேர்ந்து ஃபிப்டி ஃபிப்டி முதலீட்டில் உற்பத்தியை துவக்கிய போர்டு பின்னர் தனது பங்கை 72 சதவிகிதமாக உயர்த்தி கொண்டது. 2012 வாக்கில் இந்தியாவில் அதன் முதலீடு 14 ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்தது.

போர்டு சர்வதேச அளவில் பிரபலமான பல மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. போர்டு எக்கோஸ்போர்ட், போர்டு மோண்டியோ போன்ற மாடல்களை அறிமுகம் செய்தபின், இந்தியாவுக்கு புதிய செக்மென்ட் காரான போர்டு பியூஷனை 2004ல் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்னர் அதன் போர்டு பியஸ்டா மாடல் நல்ல தரமான செடான் காராக அதிக அளவில் விற்பனையானது. அதன்பின்னர் போர்டு பிகோ, போர்டு பிரீஸ்டைல் போன்ற மாடல்கள் வந்தன. கம்பீரமான எஸ்யுவி யான போர்டு எண்டவர் ஒரு அந்தஸ்து மிக்க காராக வசதியானவர்களிடம் பார்க்கப்பட்டது.

சென்னை மறைமலை நகரில் உள்ள போர்டு ஆலை ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் கார்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. 2015 ல் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் 7300 கோடி முதலீட்டில் அகமதாபாத்திற்கு அருகே சனாந்தில் இரண்டாவது ஆலையையும் போர்டு நிறுவனம் துவக்கியது. இரண்டு ஆலைகளையும் சேர்த்து ஆண்டுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் வசதி இருந்தாலும், இந்திய கார் மார்க்கெட்டில் போர்டுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்துவதாக போர்டு அறிவித்துள்ளது. இது குறித்து ஏற்கனவே ஜாடைமாடையாக தகவல்கள் வெளியானாலும், இந்த அறிவிப்பால் இரண்டு ஆலைகளிலும் பணியாற்றுபவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. அதே நேரம் இந்தியாவில் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு போர்டு டீலர்களுடன் சேர்ந்து சர்வீஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் போர்டு மஸ்தாங் போன்ற உயர் ரக கார்கள், மேக்-இ மின்சார கார் போன்றவற்றை இறக்குமதி செய்து விற்கவும் திட்டமிட்டுள்தாக கூறப்படுகிறது.

டீலர்கள் வழங்கியுள்ள ஆர்டர்கள் முடிந்த பின்னர் பிகோ, ஆஸ்பெயர், ஃபிரீஸ்டைல், எகோஸ்போர்ட் மற்றும் எண்டவர் கார்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று போர்டு தெரிவித்துள்ளது. போர்டின் கார்கள் இந்தியாவில் வெகுஜன வாகனங்களாக விரும்பப்படாததும், கியா மோட்டார், எம்ஜி நிறுவனங்களின் வருகை, பிஎஸ் 6 தரத்திற்கு கார்களை மேம்படுத்துவதில் உள்ள சவால்கள், கொரோனா காலத்தில் ஏற்பட்ட விற்பனை சரிவு, செமிகண்டக்டர்களுக்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்க முடியாமல் போர்டு பின்வாங்குகிறது. கடைசி முயற்சியாக மஹிந்திரா& மஹிந்திராவுடன் சேர்ந்து கார் உற்பத்தி செய்யும் முயற்சியும் பலன் தராததால், அமெரிக்க கார் நிறுவனமான போர்டு இந்தியாவில் இருந்து விடை பெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments