தேசிய நெடுஞ்சாலையில் விமானம் தரையிறங்க ஓடுபாதை
ராஜஸ்தானின் ஜலூரில் தேசிய நெடுஞ்சாலையில் விமான ஓடுபாதையை மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இராணுவப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் இயற்கைப் பேரிடர்க் காலத்தில் மீட்புப் பணிக்கும் நெடுஞ்சாலை ஓடுபாதை பயன்படும் எனத் தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் ஜலூரில் தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோமீட்டர் நீளத்துக்கு விமானங்கள் அவசரமாகத் தரையிறங்குவதற்கான ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, விமானப்படைத் தளபதி ராகேஷ்குமார் சிங் ஆகியோர் வந்த சி 130ஜே விமானம் ஓடுபாதையில் முதலில் தரையிறங்கியது
அதன்பின் இரண்டாவதாக சுகோய் 30 வகைப் போர் விமானமும் ஓடுபாதையில் தரையிறங்கியது. மூன்றாவதாக ஜாகுவார் வகை விமானமும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓடுபாதையில் தரையிறங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், பன்னாட்டு எல்லைக்கருகே நெடுஞ்சாலையில் ஓடுபாதை அமைத்தது, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைக் காக்க எப்போதும் தயார் நிலையில் உள்ளதையே காட்டுவதாகத் தெரிவித்தார்.
இந்த ஓடுபாதையும் மூன்று ஹெலிகாப்டர் இறங்கு தளங்களும் ராணுவத்துக்கு மட்டுமல்லாமல் இயற்கைப் பேரிடர்க் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கும் பயன்படும் எனத் தெரிவித்தார்.
விமானப்படைக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 56 போக்குவரத்து விமானங்களை வாங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா சூழலிலும் ஒருநாளைக்கு 38 கிலோமீட்டர் என்னும் அளவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தும், மும்பை - டெல்லி விரைவுச் சாலையில் 24 மணி நேரத்தில் இரண்டரைக் கிலோமீட்டர் நீளத்துக்கு நால்வழிச்சாலை அமைத்தும், பீஜப்பூர் - சோலாப்பூர் இடையே 26 கிலோமீட்டர் நீளத்துக்கு ஒரே நாளில் சாலை அமைத்தும் இந்தியா மூன்று உலகச் சாதனைகளைப் படைத்துள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பொதுவாக விமான ஓடுபாதை அமைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்றும், அதற்கு மாறாக 15 நாளில் நல்ல தரமான ஓடுபாதையை அமைக்க நம்மால் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments