தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் விவகாரம்...பொறுமையை சோதிப்பதாக உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தை மதிக்காத மத்திய அரசு, தங்கள் பொறுமையை சோதிப்பதாக தலைமை நீதிபதி என்.வி. ரமணா எச்சரித்துள்ளார்.
விசாரணையின் போது தாங்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறிய தலைமை நீதிபதி, நீதிமன்றம் அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்றார். அரசும் நீதிமன்றத்துடன் மோதல் போக்கை விரும்பவில்லை என சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டபோது, அப்புறம் ஏன் தீர்ப்பாய பணியிடங்களை நிரப்பவில்லை என தலைமை நீதிபதி வினவினார்.
தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்தை நிறுத்திவைப்பது, தீர்ப்பாயங்களை இழுத்து மூடுவது, தீர்ப்பாயங்களுக்கு பணியிடங்களை உச்சநீதிமன்றமே நிரப்புவது ஆகியவையே தங்கள் முன் உள்ள வாய்ப்புகள் என்று எச்சரித்த தலைமை நீதிபதி, இவற்றை விட்டால் அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைதான் எடுக்க வேண்டும் என்றார்.
Comments