பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை... போலீசைக் காட்டி மிரட்டியவன் "போக்சோ"வில் கைது

0 4410

விருதுநகர் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பல மாதங்களாக பாலியல் தொல்லை அளித்து வந்த நபர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். "வெளியில் சொன்னால் உன் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன்" என மிரட்டியே சிறுமியை அவன் சீரழித்து வந்தது தெரியவந்துள்ளது. 

விருதுநகர் அடுத்த நடுவப்பட்டியைச் சேர்ந்த அந்தச் சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாக யாரிடமும் சரியாகப் பேசாமல், சோர்வாகக் காணப்பட்ட சிறுமியை அழைத்து அவரது தாய் விசாரித்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த குருசாமி என்பவன் பல மாதங்களாக அவரை மிரட்டி பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது.

எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் 35 வயதான குருசாமிக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. உறவினராக இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் என்பதால் அவனை மாமா என்றும் அவனது மனைவியை அக்கா என்றும் அழைத்து வந்துள்ளார் சிறுமி. இதனை சாதகமாக்கிக் கொண்ட குருசாமி, சிறுமி தனியாக இருக்கும் நேரங்களில் அவரிடம் அத்து மீறியுள்ளான். "உன் அக்காவை எனக்குப் பிடிக்கவில்லை. உன்னைத்தான் பிடித்திருக்கிறது. அதனால் விரைவில் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்" என்றெல்லாம் கூறி சிறுமியிடம் அவன் அத்து மீறி வந்ததது தெரியவந்துள்ளது.

ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து விலக நினைத்த சிறுமியிடம், "விஷயத்தை வெளியில் சொன்னால் உன் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்றும் பிறகு உன்னையும் உன் அப்பா, அம்மாவையும் போலீசார் கைது செய்துவிடுவார்கள்" என்றும் மிரட்டி வந்திருக்கிறான் குருசாமி. இதனால் பயந்துபோன சிறுமி, வெளியில் யாரிடமும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சொல்லாமல், பல மாதங்களை நரக வேதனையுடன் கழித்து வந்திருக்கிறார். தற்போது குருசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமைகள் குறித்தும், காவல்துறை தரப்பில் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதேநேரம் பெற்றோரும் அவ்வப்போது பெண் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசினால்தான் தங்களுக்குள்ள குறைகள் குறித்து அவர்கள் தைரியமாக வெளியில் சொல்ல முன்வருவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments