குடும்ப பெண்களுக்கு மூளைச்சலவை?: நித்தியின் பெண் சீடர்களை விரட்டியடித்த பொதுமக்கள்

0 5701

மூளைச் சலவை செய்து பெண்களை பெங்களூரு ஆசிரமத்திற்கு கூட்டிச் செல்வதாகக் குற்றம்சாட்டி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வந்த காரை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டனர். கார் ஓட்டுநரை லேசாக ஒரு தட்டு தட்டிய பொதுமக்கள், இனிமேல் இந்த பக்கம் வந்தால் அடித்து நொறுக்கிவிடுவோம் என எச்சரிக்கவே, கண்ணில் உயிர் பயம் தெரிய நித்யானந்தா பெண் சீடர்கள் ஓட்டம் பிடித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்த  ராமசாமி, வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அந்த வீடும், கடையும் ராமசாமியின் மனைவி அத்தாயி பெயரில் உள்ள நிலையில், அவர் பட்டணம் பகுதியில் உள்ள நித்யானந்தா தியான பீடத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், வீடு மற்றும் கடையின் பெயரில், வங்கியில் வாங்கிய கடன் தொகை 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கணவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு, கடந்த 2017ஆம் ஆண்டு, பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு சென்ற அத்தாயி, அதன்பின்னர் பல முறை குடும்பத்தினர் வலியுறுத்தியும் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், வங்கியில் வாங்கிய கடனுக்கான வாய்தா முடிந்த நிலையில் வீடு ஜப்திக்கு வந்துள்ளது. கடனை அடைத்து வீட்டை மீட்பதற்காக பணத்தை தயார் செய்த ராமசாமி, அதற்கு அத்தாயி-யின் கையெழுத்து அவசியம் என்பதால் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு பல முறை சென்று, மனைவியை அனுப்புமாறு வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கையெழுத்து போட்டவுடன் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அத்தாயியை 2 பெண் சீடைகள் காரில் அழைத்து வந்துள்ளனர்.

பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் அந்த காரை மடக்கிய ராமசாமி மற்றும் அவரின் மகன் பழனிசாமி இருவரும் பொதுமக்கள் உதவியுடன் அத்தாயியை மீட்டு வேறு காரில் அனுப்பி வைத்தனர்.

உடன் வந்த பெண் சீடைகளை வந்த வழியே ஓடிவிடுமாறு எச்சரித்தபோது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பெண்களை மூளைச் சலவை செய்து ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவதாகக் கூறி ஆவேசமடைந்த பெண் ஒருவர், கார் ஓட்டுரை ஒரு கைபார்க்க முயன்றார்.

இனிமேல் இந்த பக்கம் வந்தால் நடப்பதே வேறு என பொதுமக்கள் எச்சரித்ததை அடுத்து, நித்தியின் பெண் சீடைகள் காரில் திரும்பிச் சென்றனர்.

பட்டணம், வடுகம், புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் நித்தியின் ஆசிரமத்தில் உள்ளதாகவும், அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தற்போது மீட்கப்பட்டுள்ள அத்தாயி, நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து தன்னை விட மறுக்கிறார்கள் என்றும், தன்னை வந்து கூட்டிச் செல்லுமாறும் மகனிடம் பேசிய வீடியோ ஒன்றையும் கணவர் ராமசாமி வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments