''குதிச்சிருடா கைப்பிள்ளை'' கால்வாயில் குதித்து தப்ப முயற்சி.. கொத்தாக தூக்கிய போலீஸ்..!

0 4170

சென்னையில் மருந்து கடையின் ஷட்டரை உடைத்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு சென்ற 2 பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க, கழிவுநீர் கால்வாயில் குதித்து முத்து எடுக்க முயன்ற கொள்ளையர்களை அதே கழிவு நீர் கால்வாயில் குதித்து கொத்தாக தூக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இக்பால் நியூ ஆவடி சாலையில் சென்னை மருந்தகம் என்ற பெயரில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 4-ந் தேதி நள்ளிரவில் இந்த மருந்தகத்திற்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், பூட்டை உடைத்து ஷட்டரை திறந்தனர். பிறகு கத்திரிக்கோலை வைத்து உள் கதவை திறக்க முயன்றனர். அதை திறக்க முடியாததால், மெடிக்கலில் வாடிக்கையாளர்களுக்கு மருந்து கொடுக்க அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியிலான Slide டோரை திறந்து உள்ளே சென்றனர்.

ஆள் யாரும் வருகிறார்களா? என ஒருவன் வெளியே நின்று நோட்டமிட, மற்றொருவன் மெடிக்கலுக்குள் புகுந்து பணத்தை திருடிக் கொண்டு சென்று விட்டனர்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த இக்பால் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும், கடையில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், கொள்ளையர்கள் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம்வின்செண்ட் தலைமையிலான போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், மெடிக்கல் ஷாப்பில் திருட்டில் ஈடுபட்ட இருவரும் மந்தவெளி பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மர்ம நபர்கள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க நினைத்த இருவரும், கழிவுநீர் கால்வாயில் குதித்தனர்.

ஆனாலும், தயங்காத போலீசார் உடனடியாக தாங்களும் கால்வாயில் குதித்து கொள்ளையர்களை கொத்தாக கைது செய்தனர். பின்னர், அவர்களை குளிக்க வைத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட விஜயகுமார், ராஜேஷ் என்ற இவர்கள் மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 55,000 ரூபாய் பணமும், 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments