திருமணத்தை நிறுத்திய இன்ஸ்டா காதல்...இளைஞருக்கு விழுந்த சரமாரி அடி

0 7436

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை அவரது உறவினர்களுக்கு அனுப்பி, பெண்ணுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை இளைஞன் ஒருவன் நிறுத்தியுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த இளைஞனை ஏமாற்றி வரவழைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கருதனம்பட்டியைச் சேர்ந்த அந்த இளம்பெண், கொடைக்கானலிலுள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை பயின்று வருகிறார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரத்தை சேர்ந்த மேகநாதன் என்பவன் அந்தப் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகியுள்ளான். சாதாரண பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் தனியாக சந்தித்துக் கொள்வதும் வீடியோ காலில் பேசிக்கொள்வதுமாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இளம்பெண்ணுடனான அந்தரங்க வீடியோக்களை மேகநாதன் ஸ்க்ரீன் ரெக்கார்டிங் எடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வீட்டில் திருமணம் செய்ய முடிவெடுத்து ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன. இதனையறிந்த மேகநாதன், இளம்பெண்ணின் செல்போனை தந்திரமாக வாங்கி, அதிலிருந்த அவரது உறவினர்களின் செல்போன் எண்களை ரகசியமாக நகலெடுத்து வைத்துக்கொண்டுள்ளான்.

முதலில் அந்தரங்க வீடியோ கால் பதிவுகளை இளம்பெண்ணுக்கு அனுப்பி, வேறு யாரையும் நீ திருமணம் செய்துகொள்ள முடியாது என்று அவன் மிரட்டியதாகக் கூறப்படும் நிலையில், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், போலீசில் புகாரளித்துள்ளார்.

போலீசாரும் மேகநாதனை வரவழைத்து அவனது செல்போனில் வைத்திருந்த வீடியோ பதிவுகளை அழித்துவிட்டு கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால் மேகநாதன் அந்த வீடியோக்களை வேறு சில செல்போன்களில் நகலெடுத்து வைத்திருந்துள்ளான்.

விவகாரம் போலீஸ் வரை சென்றதால் ஆத்திரமடைந்த மேகநாதன், தான் நகலெடுத்து வைத்திருந்த வீடியோக்களை இளம்பெண்ணின் உறவினர்களுக்கும் அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த மணமகனுக்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்தவே, இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

திருமணம் தடைபட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள், இளம்பெண்ணை விட்டே மேகநாதனிடம் பேசவைத்து, அவனை ஊருக்குள் வரவழைத்துள்ளனர். 4 நண்பர்களுடன் காரில் வந்த மேகநாதனை ஊர் எல்லையில் வைத்தே மடக்கிய உறவினர்கள், அவனது நண்பர்களை விட்டுவிட்டு, மேகநாதனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். கை உடைக்கப்பட்டு, கழுத்தில் காயத்தில் காயத்துடன் கிடந்த மேகநாதன், அந்தப் பெண் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் தான் தான் எல்லாத் தவறுகளையும் செய்ததாகவும் கூறியுள்ளான்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு மேகநாதன் மீது இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவனை கடுமையாகத் தாக்கிய குற்றத்துக்காக இளம்பெண்ணின் உறவினர்கள் 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சமூக வலைதலங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூடுதல் கவனத்துடன் அவர்களை அணுக வேண்டும் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதேநேரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வரும் நிலையில், இப்படி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது பாதிக்கப்பட்ட தரப்புக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் போலீசார் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments