மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - தமிழக அரசு
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே, தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, "விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கொரோனா மூன்றாம் அலை உருவாகும் அபாயம் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்த தடை விதிக்குமாறு, மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் தான் தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தடை விதித்திருப்பதாக அவர் கூறினார்.
இதன் பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது போல, விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Comments