தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க வரும் 6ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, மேலும் 6 மாத அவகாசம் கோரி, உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கோரி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே 2 முறை அவகாசம் கோரியிருந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் மூன்றாவது முறையாக அவகாசம் கோரியுள்ளது.
மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க வரும் 6ஆம் தேதி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. வரும் திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே, சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகளுக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது என்றார். இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
Comments