மேட்ரிமோனி மூலம் பலே மோசடி..! நைஜீரிய நாட்டு இளைஞர்கள் கைது..!

0 4538
மேட்ரிமோனி மூலம் பலே மோசடி..! நைஜீரிய நாட்டு இளைஞர்கள் கைது..!

மறுமணத்திற்கு மேட்ரிமோனியில் வரன் தேடும் வசதி படைத்த பெண்களை குறி வைத்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி நூதன முறையில் பண மோசடி செய்த நைஜீரிய நாட்டு இளைஞர்களை சென்னை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூரைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண், மறுமணத்துக்காக மேட்ரிமோனி ஆப்பில் வரன் தேடியுள்ளார். ஐ.டி.நிறுவனத்தில் HR ஆக பணிபுரியும் அந்த பெண்ணுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டு ராணுவத்தில் டாக்டராக பணியாற்றி வருவதாக கூறி விஜய் என்ற போலி மேட்ரிமோனி ஐ.டி. மூலம் சலீம் என்பவன் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளான்.

முதல் வாழ்க்கை விருப்பப்படி அமையாததால், 2-ஆவது வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருந்த அந்த பெண்ணிடம், ஆறுதல் வார்த்தை பேசிய சலீம் முழுக்க முழுக்க நம்ப வைத்துள்ளான். ஆரம்பம் முதலே, வாட்ஸ் அப் ஆடியோ காலில் மட்டும் பேசி வந்த சலீம், ராணுவத்தில் மருத்துவராக இருப்பதால் வீடியோ காலில் பேச முடியாது எனக் கூறி கதை அளந்துள்ளான். பெண்ணை நம்ப வைக்க, வேறொரு நபரின் புகைப்படங்களை தன்னுடைய புகைப்படங்கள் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளான்.

பின்னர், நெருக்கமாக பழக ஆரம்பித்தவுடன் நெதர்லாந்தில் இருந்து கிப்ட் வாங்கி அனுப்புவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளான். கிப்ட் வாங்கி அனுப்புவதாக சலீம் கூறிய சில நாட்களிலேயே அவருக்கு unknown நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

மறுமுனையில் பேசிய பெண் ஒருவர் தாங்கள் விமான நிலைய சுங்கத்துறையில் இருந்து பேசுவதாகவும், உங்கள் பெயருக்கு லேப்டாப், வைர நகைகள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த கிப்ட் மிகவும் costlyஆக இருக்கிறது எனவும், பொருளுக்கான வரியை செலுத்தினால் மட்டுமே கிப்டை பெற முடியும் எனவும் கூறி பெரம்பூர் பெண்ணை நம்ப வைத்துள்ளனர்.

இதனை நம்பிய பெரம்பூர் பெண்ணும், போனில் பேசிய பெண் கொடுத்த வங்கிக் கணக்குக்கு முதலில் 40ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். பின்னர், அவர்கள் கூறியபடி நான்கு லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். மொத்தமாக நான்கரை லட்சம் ரூபாய் செலுத்தியும் சலீம் அனுப்பியதாக கூறப்படும் கிப்ட் வீடு வந்து சேரவில்லை. பின்னர் மேலும் 2லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என மர்ம நபர்கள் கூறவே, சந்தேகமடைந்த பெரம்பூர் பெண் சலீமை தொடர்புகொண்டு கடுமையாக பேசியுள்ளார்.

இதனையடுத்து, கிடைத்தவரை லாபம் என நினைத்து பெண்ணுடனான தொடர்பை சலீம் துண்டித்துக் கொண்டுள்ளான். இதனையடுத்து, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் செய்தார். விசாரணையில், இதேபாணியில் மறுமணத்திற்கு வரன் தேடும் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்களை குறி வைத்து டாக்டர் எனக் கூறி அந்த கும்பல் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

விசாரணையை தீவிரப்படுத்திய சைபர் கிரைம் போலீசார், Operation D என்ற பெயரில் தனிப்படைகள் அமைத்தன. பெரம்பூர் பெண் பணம் செலுத்திய வங்கிக் கணக்கு, சலீம் பேசிய செல்போன் எண் ஆகியவற்றை ஆய்வு செய்த போது, மோசடி கும்பல் டெல்லி அருகே துவாரகா மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக டெல்லி விரைந்த தனிப்படை போலீசார் பெண்ணிடம் மோசடி செய்த 2 நைஜீரியர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 ஏடிஎம் கார்டுகள், 4 லேப்டாப்புகள், 15 செல்போன்கள், நான்கரை லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மோசடி நபர்கள் தங்கியிருந்த வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நைஜீரியர்களும் தங்கியிருந்ததுள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மோசடி, கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேட்ரிமோனியில் வரன் தேடும் போது இதுபோன்று மோசடி நபர்களிடம் சிக்காமல் கவனமாக செயல்பட வேண்டும் என பெண்களுக்கு போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments