நாட்டின் பொது சொத்துகளை விற்கக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்கக் கூடாது என வலியுறுத்திப் பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாகக் காங்கிரஸ் உறுப்பினர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து என்றும், மக்கள் நலனுக்காகச் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பது நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
சிறு குறு நிறுவனங்களின் ஆணிவேராகச் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது சரியல்ல என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு விழுப்புரத்தில் 4கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர், 1987 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் 21 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது தாம் அளித்திருந்த வாக்குறுதிபடி, இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிர் நீத்த தியாகிகளுக்கு 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Comments