காணாமல் போன ஆடிட்டர் சடலமாக மீட்பு: விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்
சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது சடலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாந்தோப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் காணாமல் போன சில தினங்களுக்கு முன் அரசியல் பிரமுகர் ஒருவர் ஆடிட்டரின் மனைவியிடம் மிரட்டும் தொணியில் பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜன ரஞ்சன் பிரதான் என்ற அந்த நபர், கடந்த 26ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவரைப் பார்க்க வேலூர் செல்வதாகக் கூறிச் சென்றார் என்றும் பின்னர் அன்று இரவு போன் செய்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சாமல்பட்டி அருகே கிரானைட் குவாரி ஒன்றை ஆய்வு செய்ய வந்துள்ளதாக மனைவி பூர்ணிமாவிடம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் 27ஆம் தேதி காலை அவரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாகவும் உடன் சென்ற அவரது நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் பூர்ணிமா போலீசில் புகாரளித்துள்ளார். வழக்கறிஞர் பாலாஜி என்பவரது காரில், தனது நண்பர்களான கிருஷ்ணகுமார், சபரீஷ் உள்ளிட்டோருடன் ஜன ரஞ்சன் பிரதான் சென்றிருந்ததாகக் கூறிய அவரது மனைவி, சம்மந்தப்பட்ட அந்தக் கார் கர்நாடகாவில் ஓரிடத்தில் நிற்பது ஜிபிஎஸ் கருவி மூலம் தெரியவந்ததாகவும் கூறியிருக்கிறார். இது தவிர, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சென்னை சின்மயா நகரை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ((லோகு என்பவர்)), தன்னை மிரட்டியதாக ஆடியோ ஒன்றையும் பூர்ணிமா போலிசில் கொடுத்துள்ளார்.
ஜனரஞ்சன் பிரதானுடன் சென்ற அவரது நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று அந்த மாந்தோப்பில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது திடீரென்று ஜன ரஞ்சன் பிரதான் மயங்கிச் சரிந்து உயிரிழந்து விட்டதாகவும் பயத்தில் அவரை அங்கேயே புதைத்துவிட்டு வந்து விட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து ஜன ரஞ்சன் பிரதானின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக திருமால் என்பவனை முதற்கட்டமாக போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜன ரஞ்சன் பிரதானின் நண்பர்கள் சொல்வது உண்மையா ? அல்லது கொலை செய்யப்பட்டிருக்கலாமா என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Comments