டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்

0 5085

பாராலிம்பிக் 10 மீட்டர் ஏர்-ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக்க போட்டிகளில் மகளிர் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. இதேபோல ஈட்டி எறிதலில் இந்தியா இரட்டை பதக்கம் வென்றுள்ளது. வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியான பாராலிம்பிக்ஸ், டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்-ரைபிள் பிரிவில், இந்தியாவின் அவனி லெகரா அபாரமான திறனை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் அவர், பாராலிம்பிக் போட்டியில் மூவர்ணக் கொடியை பட்டொளி வீசிப் பறக்கச் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவனி லெகராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய பிரதமர் மோடி, அவரது வெற்றி பெருமிதத்திற்குரியது என பாராட்டு தெரிவித்தார்.

 

பாராலிம்பிக்ஸ் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்றார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்தினார். போட்டியில் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்றவுடன், அவரது ஊரான, ஹரியானா மாநிலம் பகதுர்கரில் கொண்டாட்டம் களைகட்டியது. தங்கள் குடும்பம் அளவற்ற மகிழ்ச்சியில் மிதப்பதாக, யோகேஷ் கதூனியாவின் தாய் தெரிவித்தார்.

 

இதேபோல, பாராலிம்பிக் போட்டிகளில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா இரட்டைப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் குஜ்ஜார் வெண்கலப் பதக்கமும் வென்றனர். அடுத்தடுத்த பதக்கங்களால் வரலாற்றுச் சிறப்புமிக்க காலைப் பொழுது என வர்ணித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நமது விளையாட்டு வீரர்களால் பெருமிதம் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments