பிஞ்சுக் குழந்தையை பெற்ற தாயே கொடூரமாகத் தாக்கும் வீடியோ… அதிர்ச்சி சம்பவம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றக் குழந்தையை கொடூரமாகத் தாக்கி, அதனை வீடியோவாகவும் பதிவு செய்த பெண் ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கணவருடன் வாழப் பிடிக்காமலும் சென்னையில் இருந்த ஆண் நண்பருடன் பழக முடியாமலும் இருந்த ஆத்திரத்தை குழந்தை மீது காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதலங்களை ஆக்கிரமித்திருந்த இந்த வீடியோ, ஒட்டுமொத்த மக்களையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சின்னஞ்சிறு குழந்தை என்றும் பாராமல் இரக்கமின்றி அரக்க குணத்தோடு தாக்கும் இந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் கொந்தளித்தனர்.
ஒருவழியாக அந்தப் பெண், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மனலப்பாடி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த வடிவழகன் என்பவருடைய மனைவி துளசி என்பது தெரியவந்தது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட துளசிக்கும் வடிவழகனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு வரை தம்பதி இருவரும் சென்னையில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்குக்குப் பின் சொந்த ஊர் வந்த துளசியின் நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கண்டுள்ளார் வடிவழகன். இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 2ஆவது மகனான 2வயது பிரதீப் குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்று கூறப்படும் நிலையில், சற்று பலவீனமாகவும் இருந்துள்ளான். அவ்வப்போது குழந்தையின் முகம், கை, கால்களில் வீக்கம் மற்றும் காயங்கள் காணப்படும் என்றும் அதுகுறித்து கேட்டால், குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டான், விளையாடும்போது தவறி விழுந்துவிட்டான் என துளசி கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் வீட்டில் இருப்பவர்கள் வயல் வேலைக்குச் சென்ற பின்னர் கதவைச் சாத்திக் கொண்டு துளசி வெகுநேரம் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருப்பார் என்றும் அப்போது 2ஆவது மகன் பிரதீப் அழும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் என்று அக்கம்பக்கத்தினர் வடிவழகனிடம் கூறியுள்ளனர். பின்னர்தான் சென்னையில் வேலை செய்தபோது, வேறு ஒருவருடன் துளசிக்குப் பழக்கம் ஏற்பட்டதும் சொந்த ஊருக்கு வந்தபிறகு அவனுடன் வீடியோ காலில் துளசி பேசிக் கொண்டிருந்ததும் தெரியவந்ததாகக் கூறுகிறார் வடிவழகன். இது தொடர்பான பிரச்சனை பூதாகரமாகி, துளசியை ஆந்திராவில் உள்ள அவரது வீட்டில் விட்டு வந்த வடிவழகன், விவாகரத்து பத்திரத்திலும் அவரிடம் கையொப்பம் வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் எதேச்சையாக 4 நாட்களுக்கு முன் பீரோவிலிருந்த துளசியின் செல்போனை எடுத்து ஆராய்ந்தபோது, குழந்தை பிரதீப்பை கடுமையாகத் தாக்கி, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருந்தது தெரியவந்ததாகக் கூறுகிறார் வடிவழகன். அந்த வீடியோ அவரது உறவினர்களுக்கு அனுப்பப்பட, பின் சமூக வலைதளங்கள் முழுவதும் தீயாகப் பரவி இருக்கிறது.
உடனடியாக ஆந்திரா விரைந்த விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீசார், துளசியை கைது செய்துள்ளனர். இதுபோன்ற கொடூர மனநிலை கொண்ட நபர்களுக்கு தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே, ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்ட துளசியை விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments