பணத்துக்காக சிறுவன் கடத்தல் செல்போன் சிக்னலை வைத்து மீட்பு ... சித்ரவதை செய்த கொடூரன் கைது

0 4020
பணத்துக்காக சிறுவன் கடத்தல் செல்போன் சிக்னலை வைத்து மீட்பு ... சித்ரவதை செய்த கொடூரன் கைது

சேலத்தில் 50லட்சம் ரூபாய் பணம் கேட்டு கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். சினிமா பாணியில் சிறுவனை கடத்தி கை, வாயை கட்டி தனி அறையில் பூட்டி வைத்து, ஒரு வாரமாக சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டதோடு மயக்க மருந்தை செலுத்தி துன்புறுத்திய கொடூர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சேலம் அருகேயுள்ள தொளசம்பட்டி அடுத்த நச்சுவாயனூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி - லதா தம்பதியின் 14 வயது மகன் சபரி. கடந்த 22-ந் தேதி மாலை விளையாடச் சென்ற சபரி, அதற்கு பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.

வழக்கமாக சபரி செல்லும் இடங்களில் அவனை தேடிய பெற்றோர், மகனை காணவில்லை எனக் கூறி 23-ந் தேதி தொளசம்பட்டி போலீசில் புகாரளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சிறுவன் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்திய போதும் துப்பு கிடைக்கவில்லை. இதனிடையே, சபரியின் தாய் லதா வேலை செய்து வரும் ஜவுளிக் கடை உரிமையாளர் சரவணனின் செல்போன் எண்ணுக்கு 27-ந் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய மர்ம நபர் சபரியை கடத்தி வைத்துள்ளதாகவும், 50லட்சம் பணம் கொடுத்தால் விட்டுவிடுவதாகவும் தெரிவித்துள்ளான். இந்த அழைப்பையும் சரவணன் பெரிதுபடுத்தாத நிலையில், அவரை நம்ப வைப்பதற்காக சிறுவனை கடத்தி வைத்துள்ள வீடியோவை சரவணனின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளான் அந்த மர்ம நபர்.

இந்த தகவலை அவர்கள் போலீசில் தெரிவிக்கவே, சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக, ஜவுளிக் கடை உரிமையாளர் சரவணன் செல்போனுக்கு வெவ்வேறு மூன்று எண்களில் இருந்து ஒரே ஒருவன் தான் தொடர்பு கொண்டுள்ளான் என்பதை கண்டறிந்தனர்.

அந்த செல்போன் எண்களின் சிக்னலை வைத்து குகை பகுதியைச் சேர்ந்த செல்வகுமாரை கைது செய்தனர். போலீசாரின் சிறப்பான கவனிப்பால் சிறுவனை கடத்தியதை செல்வக்குமார் ஒப்புக் கொண்ட நிலையில், தௌசம்பட்டியிலுள்ள தனது தச்சுப் பட்டறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறியுள்ளான்.

உடனடியாக அங்கு விரைந்த போலீசார், மயக்க நிலையில் இருந்த சிறுவனை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரிடம் சிக்கி விடக் கூடாது என எண்ணி சினிமா பாணியில் செல்வக்குமார் கடத்தல் சம்பவத்தை அரங்கேறியுள்ளான். விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பைக்கில் வைத்து கடத்திச் சென்ற செல்வக்குமார், தச்சுப் பட்டறையிலுள்ள சிறிய அறையில் பூட்டிவைத்து, வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிவிட்டதோடு, கை, கால்களையும் கட்டி வைத்து விட்டதாக கூறியுள்ளான்.

அத்தோடு, சிறுவனின் சின்ன முனங்கல் சத்தம் கூட வெளியில் கேட்டுவிடக் கூடாது என திட்டமிட்டு, ஜன்னல்களை அடைத்து, ஸ்பீக்கரில் அதிக வால்யூம் வைத்து பாட்டு போட்டு வைத்துள்ளான்.

எல்லாவற்றுக்கும் மேல, ஒரு வாரமாக சாப்பாடு போடாமல் சிறுவனை பட்டினி போட்ட அந்த கொடூரன் செல்வக்குமார், தினமும் மயக்க மருந்தைச் செலுத்தி சிறுவனை மயக்க நிலையிலேயே வைத்திருந்தான் என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவன் பயன்படுத்திய 3 திருட்டு செல்போன்கள், ஒரு பைக், மயக்க மருந்து வாங்கியதற்கான சீட்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மயக்க மருந்து வழங்கிய சம்பந்தப்பட்ட மெடிக்கல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தச்சு பட்டறை நடத்தி வந்த செல்வக்குமார் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு போதிய வருமானம் இல்லாமல் இருந்ததால் சிறுவனை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments