5 கிலோ தங்கம் அபேஸ்..! ஆடிக்கார் கிட்னாப்பர்ஸ்..! போலீசில் அகப்பட்ட பின்னணி.!

0 4673

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கார் டிரைவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஆடி கார் கிட்னாப்பர்ஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 5 கிலோ தங்கத்தை அபேஸ் செய்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்   குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பூரை அடுத்த அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் மகேஷ்வரன் என்பவர், கடந்த 26ம் தேதி காரில் சென்ற போது அவரை ஆடிக்கார் ஒன்று வந்து வழிமறித்துள்ளது.

உடன் வந்த மேலும் 2 கார்களில் இருந்து இறங்கிய ஏழு பேர் கொண்ட மர்மகும்பல் மகேஷ்வரனை கத்தி முனையில் மிரட்டி அவரது காரில் இருந்து இறக்கி மற்றொரு காரில் கடத்திச்சென்றனர்.

இதுதொடர்பான புகாரில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

மகேஷ்வரனின் நண்பர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரமணிகண்டன் , அழகர்சாமி ஆகியோரை மர்மகும்பல் ஏற்கனவே கடத்திச் சென்று அவர்கள் மூலம் மகேஷ்வரனின் இருப்பிடத்தை அறிந்து அவரைக் கடத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடத்தப்பட்டவர்களை மேல்கரைபட்டி காட்டுப் பகுதியில் கடத்தல் கும்பல் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த நிலையில், 3 பேரும் அங்கிருந்து தப்பித்து வந்து போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

அந்த 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆடிக்காரில் வலம் வந்தது, கில்லாடி கிட்னாப்பர் குட்லக் ராஜேந்திரனின் கும்பல் என்பது தெரியவந்தது.

குட்லக் ராஜேந்திரனிடம், வேலை செய்து வந்த மகேஸ்வரன், இலங்கையிலிருந்து தங்க பிஸ்கட்டுகளை கடத்திவர உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகின்றது.

ஓராண்டுக்கு முன், ஐந்து கிலோ தங்க பிஸ்கட்டை கடத்தி வந்தபோது, ராமநாதபுரம் பகுதியில் தன்னை மறித்த காக்கி உடையிலிருந்த நபர்கள் தன்னைத் துரத்தியதாகவும், தங்கபிஸ்கட்டை கீழே போட்டு விட்டு, தான் தப்பி வந்ததாகவும் குட்லக் ராஜேந்திரனிடம் மகேஷ்வரன் கூறியுள்ளார்.

இதனை குட்லக் ராஜேந்திரன் ஏற்காத நிலையில், கடத்தல் தொழிலுக்காக முதலீடு செய்த யாசர் அராபத் மற்றும் முகம்மது ரிஸ்வான் ஆகியோர் குட்லக் ராஜேந்திரனிடம் தங்க பிஸ்கட் கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, மகேஷ்வரனை கடத்திச் சென்ற குட்லக் ராஜேந்திரன் , தங்கத்துக்கு பதில் மகேஸ்வரனை அவர்களிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

ஒருவார காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகேஷ்வரன் அங்கிருந்து முதலில் தப்பி வந்து, திருப்பூரில் பாக்கியவதி என்பர வீட்டில் இரண்டு மாதங்களாக வாடகைக்கு குடியிருப்பது போல மறைந்து வாழ்ந்தது தெரிய வந்தது.

மகேஷ்வரனிடமிருந்து தங்க பிஸ்கட்டுகளை மிரட்டி வாங்குவதற்காக முகம்மது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோர் குட்லக் ராஜேந்திரன், அன்பு, கார்த்தி, பாண்டி மற்றும் கோவை போலீஸ்காரர் ராஜேஷ்வரன் உள்ளிட்டோரை கொண்டு மகேஷ்வரனை 2 வது முறையாக கடத்திச் சென்று அடைத்து வைத்தது தெரியவந்தது.

கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முகம்மது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோரையும், கோவையில் பணிபுரியும் காவலர் ராஜேஷ்வரனையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். குட்லக் ராஜேந்திரனை போலீசார் தேடிவருகின்றனர்.

பா.ஜ.க பிரமுகரான குட்லக் ராஜேந்திரன் மீது ஏற்கனவே தங்க கடத்தல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

3 பேரை கடத்திய ஆடிக்கார் கிட்னாப்பர்கள் மூலம் இலங்கையில் இருந்து தடையின்றி தங்க கடத்தல் நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments