ரூ.678 கோடியில் கட்டப்படும் பறக்கும் பாலம் இடிந்தது..! மதுரை சம்பவத்தால் அதிர்ச்சி
மத்திய அரசின் பாரத்மாலா யோஜனா திட்டத்தின் கீழ் மதுரையில் இருந்து திருச்சிக்கு விரைவாக செல்லும் வகையில் நத்தம் வழியாக துவரங்குறிச்சிக்கு 4 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையை இணைக்கும் வகையில் சொக்கிக்குளத்தில் உள்ள மதுரை பாண்டியன் ஓட்டல் சந்திப்பு தொடங்கி செட்டிக்குளம் வரை 7.3 கிலோ மீட்டர் தொலைவிற்கு 268 ராட்சத தூண்களுடன் கூடிய பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
மொத்தமாக 980 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த சாலை பணியில் பறக்கும் பாலம் மட்டும் 678 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை jmc ப்ராஜெக்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் சார்பில் அஷிஷ் தாகூர் என்பவர் ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டு வருகின்றார்
இந்த பறக்கும் பாலத்தின் ஒவ்வொரு தூணையும் இணைக்கும் வகையில் பாலத்தின் மேல் பகுதியில் கான்கிரீட் கிடைமட்ட சிறகு சுவர்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த கான்கிரீட் சிறகு சுவர்கள் ஊமச்சிக்குளம் பகுதியில் தயாரிக்கப்பட்டு பெரிய லாரிகள் மூலமாக கொண்டுவரப்பட்டு கிரேன்கள் மூலம் மேலே தூக்கி தூண்கள் மீது வைத்து காண்கிரீட் மோல்டுகளால் இணைக்கப்பட்டு வருகின்றது.
தற்போது சொக்கிக்குளம், நாராயணபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தூண்களுக்கு இடையே காண்கிரீட் சுவர்களை இணைக்கும் பணி நடந்து வந்தது. 20க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மதுரை நாராயணபுரம் பேங்காலனி அருகே இரண்டு தூண்களை இணைக்ககூடிய பணியின் போது காண்கிரீட் சிறகு சுவர் கட்டுமானம் சரிந்து விழுந்ததில் அந்தபணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து மதுரை தல்லாகுளம், திடீர் நகர்,அனுப்பானடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.
படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெரும்பாலான தொழிலாளர்கள் தூண்களுக்கு மேல் பகுதியில் நின்றதாலும் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்த நேரத்தில் சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மீட்பு பணிகள் முழுமையாக முடிவடைந்தால் மட்டுமே வேறுயாராவது இடிபாடுக்களில் சிக்கி உள்ளனரா ? என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ஆகியோர் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர்
Comments