அசாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிவாரண முகாம்களில் 6217 பேர் தங்க வைப்பு
அசாமில் கனமழையால் பிரம்மபுத்திரா ஆற்றிலும் அதன் துணையாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களில் மொத்தம் ஒரு இலட்சத்து 33ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டிக் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. இதனால் நெடுஞ்சாலைகள் அரிக்கப்பட்டுள்ளதுடன், விளைநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
பொங்கைகான், திமாஜி, திப்ரூகர், லக்கிம்பூர், மஜூலி, சிவசாகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரமுள்ள 243 ஊர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப் பகுதிகளில் படகுகளின் உதவியுடன் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 66 நிவாரண முகாம்களில் ஆறாயிரத்துக்கு மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments