மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் ; தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது

0 7193
மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்

கர்நாடகத்தை உலுக்கிய, மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேரை மைசூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா பகுதியில், கடந்த 24-ஆம் தேதி காதலனுடன் பேசிக் கொண்டிருந்த எம்பிஏ மாணவியை, 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளது.

சாமுண்டி மலை அடிவாரத்தில் பாறை மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது 6 பேர் கும்பல், தங்களை சுற்றி வளைத்து கிண்டல் செய்ததாகவும், தட்டிக்கேட்ட தன்னை கல்லால் தலையில் தாக்கியதில் சுயநினைவை இழந்ததாகவும் அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் நினைவு திரும்பி எழுந்தபோது, தன்னைச் சுற்றி 4 பேர் நின்று கொண்டு, வீட்டுக்கு போன் செய்து ரூபாய் 4 லட்சம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

காதலியை முதலில் காட்டுங்கள் என்று கூறியபோது, உடல் முழுவதும் நகக் கீறல்களுடன் அழுதபடி நின்ற தனது காதலியை காட்டியதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் யாரோ அவ்வழியாக வரும் சத்தத்தை கேட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும், பொதுமக்கள் உதவியுடன் இருவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததாகவும் அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், கூடுதல் டி.ஜி.பி. பிரதாப் ரெட்டி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர்.

சாமுண்டி மலை அடிவாரத்தில் மதுபானம் அருந்திய மர்மநபர்களே இந்த பலாத்கார சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக சந்தேகித்த போலீசார், அந்த கோணத்தில் விசாரணையை தொடர்ந்தனர். குற்றவாளிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சில துப்புகளின் அடிப்படையில் கேரளா, தமிழ்நாட்டுக்கும் தனிப்படை போலீசார் விரைந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதி அருகே உள்ள சூசையபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பூபதி என்பவரை மைசூர் தனிப்படை போலீசார் இன்று பிடித்துச் சென்றனர். செல்போன் டவர் சிக்னல் மூலம் பூபதியை கர்நாடக போலீசார் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, திருப்பூர் மற்றும் ஈரோடு சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த, 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட, 5 கூலித் தொழிலாளிகளை கைது செய்துள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருவன் மட்டும் இன்னும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளான். இந்த 6 பேரும் மைசூரு சென்று இளம் பெண்கள், ஜோடிகளாக இருப்பவர்களை குறிவைத்து வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவது வழக்கம் என்றும், குற்றச்செயல்களை நிகழ்த்திவிட்டு சத்தியமங்கலம் திரும்பும் வழியில், லலிதாதிரிநகர் பகுதியில் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பது வழக்கம் என்றும் கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24ஆம் தேதி காதலனையும் தாக்கிவிட்டு, கல்லூரி மாணவியை ஆளில்லாத பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்முறையை நிகழ்த்தியதாகவும் கர்நாடக போலீசார் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments