மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனவும் பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு விவசாயிகள் நலனுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்ததாகவும், அவை வேளாண் வளர்ச்சிக்கும் விவசாயிகள் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால் ரத்து செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறைக்கு எந்த மாநில அரசுடனும் ஆலோசனை நடத்தாமல், தன்னிச்சையாக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது என்றும் அவர் குற்றம்சாட்டினார். குறைந்தபட்ச ஆதார விலை என்பதை குறைந்தபட்சம் வாய் வார்த்தைக்குக் கூட இந்த மூன்று சட்டங்களும் பேசவில்லை என்றும் அவர் கூறினார். குறைந்தபட்ச ஆதார விலை நிறுத்தப்படும்; விளைபொருட்களுக்கு உரிய விலை உழவர்களுக்குக் கிடைக்காது, ஆனால் சந்தையில் செயற்கையான விலையேற்றம் ஏற்படும் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் முதலமைச்சர் முன்வைத்தார்.
இந்த தீர்மானத்தை ஆதரித்து, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். மத்திய அரசின் வேளாண் மசோத்தாகளுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அறிவித்தார்.
தீர்மானத்தை குறைகூறி அதிமுகவும், தீர்மானத்தை எதிர்த்து பாஜகவும் வெளிநடப்பு செய்தன. ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அப்போது முதலமைச்சர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Comments