காபூல் இரட்டைக் குண்டு வெடிப்புக்குக் காரணமான ஐஎஸ்ஐஎஸ் -கே தீவிரவாத அமைப்பு... யார் இவர்கள்?

0 6273

ஆப்கானிஸ்தானில் இரட்டைக் குண்டு வெடிப்பு நடத்தி, 180க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது ஐஎஸ்ஐஎஸ் -கே என்ற தீவிரவாத அமைப்பு. இதன் பின்னணி குறித்த தகவல்களைத் தற்போது காண்போம்

காபூல் விமானநிலையத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது, மத்திய கிழக்கில் செல்வாக்குள்ள ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானிய கிளையான கோரேசன் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு.

கடந்த 2015ம் ஆண்டில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது இந்த இயக்கம். ஈராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளால் ஐஎஸ் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாக இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய மத்திய ஆசிய பகுதியை மையமாகக் கொண்ட ஐ.எஸ்.-கே அமைப்பு 2018ம் ஆண்டு உலகின் 4வது பெரிய தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிய ஜிஹாதிகளிடமிருந்து ஆட்களைச் சேர்க்கிறது இந்த இயக்கம். இதில் பெரும்பாலானவர்கள் தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர் அமெரிக்க உளவுத்துறையினர்.

இந்த பயங்கரவாத அமைப்பில் ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் பேர் இருப்பதாகவும், ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்ஹரில் இருந்து இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பகுதி பாகிஸ்தானில் இருந்து ஆட்களையும் போதை மருந்துகளையும் கடத்துவதற்கு பயன்படுவதாக கருதப்படுகிறது. 

ஐஎஸ்ஐஎஸ் என்ற தாய் அமைப்பிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் - கே தோன்றியதாகக் கருதப்பட்டாலும் இரு தீவிரவாத குழுக்களுக்கு இடையேயான தாக்குதல் முறைகள் முற்றிலும் மாறுபட்டவை. ஆப்கான் பெண்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது ஐஎஸ்ஐஎஸ்-கே இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் முக்கியமான வேலை என்று கூறப்படுகிறது.

பள்ளிகளில் பயிலும் மாணவிகள் இவர்களுக்கு அதிகமாக இலக்காகிறார்கள். மருத்துவமனைகளுக்குள் புகுந்து இவர்கள் தாக்குதல் நடத்துவார்கள். பிரசவ வார்டுகளைக் கூட இவர்கள் விட்டுவிடுவதில்லை என்றும், கர்ப்பிணிகளையும் செவிலியர்களையும் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் இருக்கின்றன.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாலிபன் தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று காபூலை தாலிபன்கள் கைப்பற்றியபோது, ஐஎஸ் மற்றும் அல்-காய்தா பயங்கரவாதிகள் பலரை புல்-இ-சார்கி என்ற சிறையில் இருந்து விடுவித்தார்கள். அவர்கள் காபூலிலும் ஆப்கானிஸ்தானில் பிற பகுதிகளிலும சுதந்திரமாகத் திரிவதால் அந்நாட்டை இப்போதும் ஆபத்து சூழ்ந்திருப்பதாகவே கருதப்படுகிறது.

தீவிரவாதத்தை வளர்க்கும் எந்த இயக்கமும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டியவை என்பதே உலக நாடுகளின் ஒரே கருத்தாக உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments