குழந்தை கொலை தாய் விடுதலை..! கொலையாளி யார் ? ..! 11 ஆண்டு சிறைவாசம் முடிவு..!

0 4912
குழந்தை கொலை தாய் விடுதலை..! கொலையாளி யார் ? ..! 11 ஆண்டு சிறைவாசம் முடிவு..!

கணவன் மனைவிக்கிடையேயான தகராறில் பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர், 11 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், வழக்கின் மறுவிசாரணையில் அவரை நிராபராதி என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விடுவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ்-சகுந்தலா தம்பதியிடையே கடந்த 2002-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் சகுந்தலா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.மறுநாள் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக, செல்வராஜ் காவல்துறையில் புகார் அளித்தார்.

முதலில் சந்தேக மரணம் என விசாரித்த காவல்துறையினர் பின்னர் சகுந்தலா தான் குழந்தையை கிணற்றில் வீசியுள்ளார் என கொலை வழக்குபதிவு செய்து, சகுந்தலாவை கைது செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட நீதிமன்றம் சகுந்தலாவிற்கு ஆயுள்தண்டனை விதித்தது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு 2014ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் சகுந்தலாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் , வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. சகுந்தலா தனது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை, சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி சகுந்தலா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

மிகமுக்கியமாக, கிணற்றில் கிடந்த குழந்தையின் குடலிலோ, நுரையீரலிலோ தண்ணீர் இல்லை, கண் மூடிய நிலையில் இருந்தது என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, குழந்தை இறந்த பின் தான் கிணற்றில் வீசப்பட்டுள்ளது என வாதிட்டார்.

சகுந்தலா பெற்றோர் வீட்டுக்கு செல்லும்போது குழந்தையை அழைத்து செல்லாமல் தனியாக தான் சென்றுள்ளார், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சகுந்தலாவுக்கு அளித்த ஆயுள்தண்டனை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments