கொடநாடு கொலை கொள்ளை வழக்கு செப்டம்பர் 2ந் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், வழக்கில் சாட்சிகளாக கருதப்படும் கோடநாடு எஸ்டேட் மேலாளர், தடவியல் நிபுணர், மின்வாரிய அதிகாரி மூவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ள நீதிபதி, அவர்களிடம் தொடர்ந்து 3 நாட்களுக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயானிடம் மறு விசாரணை நடத்த கோத்தகிரி போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து கடந்த 17ம் தேதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவுத் ,குன்னூர் டிஎஸ்பி சுரேஷ், கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் சயானிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா கார் ஓட்டுநராக இருந்தவரும், வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தவருமான கனகராஜின் அண்ணன் தனபாலிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் வழக்கு, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் சயான் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். வழக்கில் மேலும் சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதால் சயான் மற்றும் தனபாலிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்யவில்லை.
மறுவிசாரணைக்கு தடை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அந்த வழக்கின் மனுதாரர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்தார். அத்துடன் வழக்கின் சாட்சிகளாக கருதப்படும் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், தடவியல் நிபுணர் ராஜகோபாலன், மின்வாரிய அதிகாரி ஆகியோரிடம் 3 நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்த நீதிபதி சஞ்சய் பாபா, அவர்கள் மூன்று பேரும் செப்டம்பர் 2ஆம் தேதி தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
Comments