காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பில் 13 அமெரிக்கர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, 140 பேர் படுகாயம்
காபூல் விமான நிலையம் அருகே மற்றும் பாரோன் ஓட்டல் ஆகிய இரண்டு இடங்களில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 13 அமெரிக்கர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காபூல் விமானநிலையத்தில் அமெரிக்க ராணுவம் வெளியேற்ற நடவடிக்கையை முழு மூச்சாக செயல்படுத்திக் கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் குண்டு வெடித்தது.
இதனிடையே விமான நிலையம் அருகே இருந்த பாரோன் ஓட்டலிலும் ஒரு பயங்கர குண்டு வெடித்தது. இந்த இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் குழந்தைகள் உள்பட 90 ஆப்கானியர்கள் உயிரிழந்தனர். 140க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் அமெரிக்க மெரீன் படையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 13 பேர் மரணித்துவிட்டதாகவும் 15 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஐநா.சபை, இந்தியா, பிரிட்டன் போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளும் நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலுக்கு காபூல் பிரிவு ஐ.எஸ்.இயக்கம் பொறுப்பேற்றது. இத்தனை துன்பம் மிக்க வேளையிலும் இருக்கும் மணிப் பொழுதுகளில் முடிந்த வரை வெளியேற்ற நடவடிக்கையைத் தொடரப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க மக்கள் யாரும் விமான நிலையம் நோக்கி வரவேண்டாம் என்றும் வாயில் அருகே திரண்டு நிற்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments