ஜெ. பல்கலை. விவகாரம்... அதிமுக வெளிநடப்பு.... முதலமைச்சர் விளக்கம்

0 4519

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழத்துடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்துச் சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அரசுக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்பழகன், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவு காழ்ப்புணர்ச்சியுடன் எடுக்கப்பட்டது எனக் கூறியதுடன், அந்த முடிவைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகத்தில் ஜெயலலிதா பெயர் இருப்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், மீன்வளப் பல்கலைக்கழகம், இசைப் பல்கலைக்கழகம் ஆகியன ஜெயலலிதா பெயரில் தான் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அதிமுக அரசு கொண்டு வந்ததாகவும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்றும், அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments