அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு... பேரவையில் மசோதா நிறைவேற்றம்
பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏழரை சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்தார்.
பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்த உள் இட ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கான மசோதாவை, பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாகவும், பல்வேறு சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் உயர் கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே, மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது எனக் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தற்போது தொழிற்கல்வி படிப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறினார்.
இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் ஏழரை சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஒரு மனதாக ஏற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.அத்தோடு, மசோதா பேரவையில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சபாநாயகரும் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது
Comments