இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியது
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 60 கோடியைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் மூடப்பட்ட பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட உள்ளன. 25 கோடி மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பத் தயார் நிலையில் உள்ளனர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பள்ளிப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 97 லட்சம் ஆசிரியர்கள் தடுப்பூசி இயக்கத்தில் முன்களப் பணியாளர்களாக சேர்க்கப்படாத நிலையிலும், இதுவரை 50 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இருப்பினும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களுடன் பள்ளி ஊழியர்கள், காவலர்கள், மாணவர்களை அழைத்து வரும் வாகன ஓட்டுனர்கள் போன்ற அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசியில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இம்மாத இறுதிக்குள் 2 கோடி டோஸ் தடுப்பூசி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என உறுதியளித்துள்ளார்.
அக்டோபர் முதல் 12 வயது முதல் 17 வயது வரையிலான பதின் பருவத்தினருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே இந்தியாவின் தடுப்பூசி திட்டம் புதிய உச்சத்தை எட்டியது. இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
Comments