olx துணையோடு புல்லட் திருடனான மென்பொறியாளர்..! கேரளாவில் தப்பி சென்னையில் சிக்கினார்..!

0 8051
OLX மூலம் புல்லட் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்க வந்த ஆசாமி ஓட்டி பார்ப்பது போல நடித்து புல்லட்டுடன் தப்பிச் சென்ற சம்பவம் சென்னை அமைந்தகரையில் அரங்கேறி உள்ளது.

OLX மூலம்  புல்லட் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்க வந்த ஆசாமி ஓட்டி பார்ப்பது போல  நடித்து புல்லட்டுடன் தப்பிச் சென்ற சம்பவம் சென்னை அமைந்தகரையில் அரங்கேறி உள்ளது. புல்லட் கொள்ளையனானாக இருந்து துபாயில் மென்பொறியாளரானவர் மீண்டும் கொள்ளையனாகி போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

OLX இணைய தளம் மூலம் எந்த ஒரு பொருளை விற்கும் போதோ வாங்கும் போதோ விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று போலீசார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டும் நம்மவர்கள் உஷாரான மாதிரி தெரியவில்லை.

சென்னை சூளைமேடு அமீர் ஜான் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுனர் விக்டர். தனது ராயல் என்பீல்ட் புல்லட்டை விற்பதற்காக olx இணைதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தைப் பார்த்து விக்டரைத் தொடர்பு கொண்ட நபர், புல்லட்டை தான் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். அமைந்தகரை கோவிந்தா தெருவில் உள்ள ஒரு கடைக்கு அருகில் நின்று கொண்டிருப்பதாகவும், அங்கே புல்லட்டை எடுத்து வருமாறும் அந்த நபர் கூறியிருக்கிறார். விக்டர் தனது வாகனத்தை அவரிடம் கொண்டு சென்று காண்பித்துள்ளார். விலைத் தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருந்து விட்டு இறுதியில் சிறிது தூரம் ஓடிச் சென்று பார்ப்பதாக கூறிய அந்த நபரிடம் விக்டர் தனது வண்டியை கொடுத்துள்ளார்.

அந்த நபரும் ஓட்டி பார்ப்பதுபோல் புல்லட்டை எடுத்து சென்றவர் திரும்பி வரவேயில்லை. அந்த நபர் தன்னை ஏமாற்றியதை தாமதமாக உணர்ந்த விக்டர் அமைந்தகரை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அமைந்தகரை போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் புல்லட்டை வாங்குவது போல் வந்து திருடிச் சென்ற அந்த நபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர்.

மேலும், அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அமைந்தகரை போலீசார், முகப்பேர் பகுதியில் வைத்து புல்லட் திருடனை பிடித்தனர். பிடிபட்டவன் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த முகமது நிஹால் என்பது தெரிய வந்தது.

முகமது நிஹாலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவன், கேரளாவில் இதே போன்று ஒ.எல்.எக்ஸ் விளம்பரத்தின் மூலம் புல்லட்டை வாங்குவது போல ஓட்டிச்சென்று திருடி, அதே புல்லட்டை ஒ.எல்.எக்ஸில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளான்.

எம்.சி.ஏ படிப்பு முடித்து துபாயில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இடையில் சில காலம் புல்லட் திருட்டுக்கு லீவு விட்ட நிஹால், இந்தியா திரும்பி சென்னையில் வேலை தேடி கிடைக்காததால், மீண்டும் பழைய திருட்டு வேலையை கையில் எடுத்ததாகவும் சிசிடிவி உபயத்தால் இறுதியில் போலீசில் சிக்கி உள்ளான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கேரளாவில் கற்ற களவை சென்னையில் தொடர்ந்ததால் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான் முகமது நிஹால்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments